வரிச்சியூர் செல்வம் மீது பதியப்பட்டுள்ள கொலை வழக்கின் நிலை அறிக்கையை விருதுநகர், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


 


 

மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு.

 

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், மதுரை கருப்பாயூரணியில் 2 ஆண்டுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலையில் செந்திலுக்கு தொடர்பு இருந்தது. இந்த வழக்கில், வரிச்சியூர் செல்வத்தின் சகோதரர் உள்பட 3 பேர் கைதான நிலையில், செந்தில்குமார் மட்டும் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்தார்.

 

இதற்கிடையில், செந்தில்குமார் காணாமல் போனதாக அவரது மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், கணவர் செந்திலை கண்டுபிடித்து தருமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது குறித்து மதுரை ஐஜி அஸ்ராகார்க் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 


 

 

தனிப்படை காவல்துறை விசாரணையில், காணாமல் போன செந்தில் கடந்த 2021 ஜனவரியில் சென்னையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் தாமிரபரணி ஆற்றில் வீசப்பட்டு உள்ளதாக தெரிய வந்தது. எந்த ஒரு சாட்சியம் இல்லாமல், தன் மீது கொலை வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாகவும், மேலும், செந்தில்குமாரை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், வழக்கின் விசாரணையை தற்போது விருதுநகர் கிழக்கு காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர். 

 

காவல்துறையினர் கொலை வழக்கை ஜோடித்து தன் மீது பதிந்துள்ளதாகவும், எனவே விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் தன் மீது உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் மேலும் செந்தில்குமார் காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல்நிலைத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 



இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, வரிச்சியூர் செல்வம் மீது பதியப்பட்டுள்ள வழக்கின் நிலை அறிக்கையை விருதுநகர், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.