சிவகாசி ஜெயலட்சுமி ஏமாற்றப்பட்டார். ‛என்னது... சிவகாசி ஜெயலட்சுமி ஏமாற்றப்பட்டாரா...’ செய்தியில் ஏதோ தவறு... என கடந்து போய்விடாதீர்கள். உண்மை தான். ஒட்டுமொத்த காவல்துறையையும் ஏமாற்றி ஏப்பமிட்ட அதே சிவகாசி ஜெயலட்சுமி தான், தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என நீண்ட நாட்களுக்கு பின்.... இல்லை இல்லை... ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்துள்ளார். 





ஏட்டு முதல் எஸ்.பி.., வரை 8 பாலியல் புகார்களை கூறி ஒரு காலத்தில் ஒட்டுமொத்த காவல்துறையையும் கதற வைத்தவர் சிவகாசி ஜெயலட்சுமி. போலீஸ் கெட்டப்பில் பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக சிறை சென்று விடுதலையானதெல்லாம் வேறு கதை. ஏமாற்றினார், மோசடி செய்தார் என்றெல்லாம் சிவகாசி ஜெயலட்சிமியை 2011ல் பரபரப்பாக பேசப்பட்ட ஜெயலட்சுமி, இப்போது 10 ஆண்டுகள் கழித்து ‛கம் பேக்’ ஆகியிருக்கிறார். ஆம்... ஜெயலட்சுமி ரிட்டன். இம்முறை, அவர் யாரையும் ஏமாற்றவில்லை; தான் ஏமாற்றப்பட்டதாக முறையிட்டுள்ளார். திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்பின் நிதி நிறுவனம் மீது புகார் வருவதும், விசாரணை நடைபெறுவதும் புதிதல்ல.




இந்நிலையில் நேற்று சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்தார் ஜெயலட்சுமி, 3 கோடியே 75 லட்சம் ரூபாய் எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், பணம் திருப்பித் தரவில்லை என்றும் அவர் கூறினார். நீண்ட நேரம் இரவு வரை காத்திருந்த ஜெயலட்சுமி, நிறுவன முகப்பிலேயே அமர்ந்திருந்தார். தகவலறிந்து வந்த போலீசார், அவரை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இன்று காலை மீண்டும் அங்கு வந்த ஜெயலட்சுமி, எல்பின் நிறுவனம் முன்பு நாற்காலியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 





700-க்கும் மேற்பட்டோருடைய பணம் அது என்றும், அவர்களுக்கு தான் பதில் சொல்ல முடியவில்லை என்றும், சம்மந்தப்பட்ட பணத்தை தந்தால் தான் திரும்பிச் செல்வேன் என்றும் கூறி அங்கேயே அமர்ந்தார். மிதுன் சமேஷ் என்பவரும் அதே புகாரில் பணத்தை கேட்டு புகார் அளித்தார். எல்பின் நிறுவனத்திற்கு மோசடி புகார் புதில்ல என்றாலும், சிவகாசி ஜெயலட்சுமி நேரடியாக வந்த புகார் அளிப்பார் என்று யாரும் எதிர்பார்க்காதது. அதுவும் அங்கு புகார் அளிக்க வருவோரை போலீசார் எளிதில் எதிர்கொண்டு பேசுவார்கள். ஆனால் சிவகாசி ஜெயலட்சுமியிடம் அவ்வாறு போலீசார் பேச முடியவில்லை. அவர் அருகில் செல்வதற்கே ஒரு வித அச்சம் இருந்ததை அறிய முடிந்தது. ‛பழசெல்லாம் கண் முன் வந்து போயிருக்கும் போல,’ என, பலர் கமெண்ட் அடித்ததையும் கேட்க முடிந்தது. பணத்தை வாங்காமல் போக மாட்டேன் என காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டுள்ள சிவகாசி ஜெயலட்சுமியை பார்க்கவே தனிக்கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. அவர்களை கட்டுப்படுத்துவதே போலீசாருக்கு பெரிய தலைவலியாகிவிட்டது. பணம் திரும்ப வருமா... ஜெயலட்சுமிக்கு நிம்மதி தருமா... என்பது தெரியாத நிலையில், காத்திருப்பு போராட்டத்தில் போலீசார் கண்கள் பூத்திருக்கு.