மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் த்ரிஷ்யம். அதன் தொடர்ச்சியாக தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்றும், தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் த்ரிஷ்யம் என்னும் பெயரில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மிகப்பெரிய கதைக்கருவே, தன் குடும்ப உறுப்பினர் செய்த தவறை மறைக்க மொத்த குடும்பமும் போலீசார் முதல் நீதிமன்றம் வரை ஒரே மாதிரியான பொய்யை சொல்லி போராடும். இதனால் அவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள், சிக்கல்கள் என்று படம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பை தரும். 


தற்போது, இந்த த்ரிஷ்யம் திரைப்படத்தை போல பெங்களூரில் ஒரு குடும்பம் நாடகம் நடத்தியுள்ளது. பெங்களூர் அனேக்கல் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம், இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டத்தை செய்துள்ளது. அதில், முதல்முறையாக போலீசில் இருந்து தப்பித்த குடும்பம், இரண்டாவது முறையாக வசமாக சிக்கிகொண்டது. சில மாதங்களுக்கு முன், 55 வயதான ரவிபிரகாஷ், (குடும்பத் தலைவர்) சதித்திட்டத்தை வழிநடத்த, அவரது 30 வயது மகன் மிதுன் குமார், மருமகள் சங்கீதா, மகள் ஆஷா மற்றும் மருமகன் நல்லு சரண் ஆகியோர் த்ரிஷ்யம் படத்தின் கதைக்களத்திற்கு இணையாக ஒரு திட்டத்தை வகுத்தது.


இவர்கள் வீட்டில் உள்ள தங்கம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, யஷ்வந்த்பூரில் உள்ள அடகு புரோக்கரிடம் அடமானம் வைத்துள்ளனர். பின்னர் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்தனர். இந்த திட்டத்தினை தெரியாத போலீசார் எல்லா இடங்களிலும் தேடி, வழக்கை முடித்துள்ளனர். இதையடுத்து, அடகு தரகரிடம் கிடைத்த தங்கத்தையும் பணத்தையும் நண்பர் ஒருவர் மூலம் குடும்பத்தினர் மீண்டும் பெற்று கொண்டனர். ஒருவேளை போலீசார் ஏதேனும் நகையை மீட்டு நம்முடையதா எனக்கேட்டால் ஆமாம் என தலையசைத்து  நகையை வாங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் திட்டம்.


தொடர்ந்து, ரவிபிரகாஷ் கிடைத்த தங்கத்தை பல்வேறு அடகு கடைக்கார்களிடம் பீஸ் பீஸாக பிரித்து அடகு வைக்குமாறு டிரைவர் தீபக்கிடம் தெரிவித்து, இதன் மூலம் நீ கைது செய்யப்பட்டால் உனக்கு ஜாமீன் வாங்கி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.


முதல்முறை எந்த சிக்கலும் வரவில்லை என்பதால் அதேபிளானை மீண்டும் கையில் எடுத்துள்ளது இந்த குடும்பம். கடந்த செப்டம்பர் 19, 2021 அன்று, துணிக்கடைக்கு ஷாப்பிங் செய்யச் சென்றபோது தனது பை திருடப்பட்டதாக சர்ஜாபூர் போலீசில் ஆஷா புகார் அளித்தார். 




தான் இருந்த ஆடைக் கடைக்குள் ஒரு நபர் நுழைந்து தனது பையை பறித்துச் சென்றதாகவும், அந்த பையில்  ரூ.30,000 ரொக்கம், மொபைல் போன் மற்றும் 1,250 கிராம் தங்கம் இருந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து, போலீசார் அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து, டிசம்பர் 2021 இல் தீபக்கை கைது செய்தனர்.


இங்குதான் இந்த நாடகம் தொடங்கியுள்ளது. அதாவது, போலீசார் இதுகுறித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தியபோது, அனைவரும் ஒரே மாதிரியான கதையை மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளனர். இதுகுறித்து தீபக்கிடம் விசாரணை நடத்தியபோது, அடகு வைத்த அடகு புரோக்கர்களின் இடத்தை தெரிவித்துள்ளார்.


சுமார் 500 கிராம் தங்கம் அவர்களிடம் இருந்து மீட்ட போலீசார், நகை குறித்து விசாரித்துள்ளனர். அந்த குடும்பத்தினர் எந்த நகைகளை பார்த்தாலும் தங்களுடையது என தெரிவிக்க, அதில் ஒரு சில நகை முஸ்லீம் குடும்பத்தின் வடிவமைப்புக்கு ஏற்ப இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறை, தீபக்கிடம் அடித்து உண்மையை கொண்டுவந்துள்ளனர். இதையடுத்து, குற்ற செயலில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர் 6 பேரையும் காவல்துறையின் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண