டார்க் சீரீஸ்:
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மிஸ்ட்ரி த்ரில்லர் தொடர் டார்க். ஜெர்மன் மொழியில் எடுக்கப்பட்ட இத்தொடர், சைன்ஸ்-பிக்ஷன் கதையாக உருவாக்கப்பட்டிருந்தது. யூகிக்க முடியாத ‘ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ்’ விறுவிறுப்பான கதைக்களம் என நல்ல தொடருக்கு ஏற்ற அத்தனை அம்சமும் டார்க் தொடரில் இருந்தது. இருப்பினும், முதல் இரண்டு சீசன் வெளியானபோது இத்தொடருக்கு ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. 2019-ஆம் ஆண்டில் கொரானா லாக்-டவுனில் இருந்த மக்கள், பொழுதைப்போக்க நெட்ஃப்ளிக்ஸில் தொடர்களை தேட ஆரம்பித்தனர். அப்படி அனைவராலும் பார்க்கப்பட்ட தொடர்தான் டார்க்.
‘டைம்-ட்ரேவல்’ கான்செப்டில் சிறிது த்ரில்லர் அம்சங்களை தூவி, புதுமையாக எடுக்கப்பட்டிருந்த இந்த சீரிஸ் அனைவரையும் கவர்ந்தது. அது வரை அன்டர்ரேட்டட் லிஸ்டில் இருந்த டார்க், அதன் பிறகு இந்தியாவில் அதிகம் ‘ஸ்ட்ரீம்’ ஆகும் தொடர்களுள் ஒன்றாக ஆனது. அந்த சீரீஸின் இரண்டு சீசன்கள் மட்டுமே வெளியாகியிருந்து நிலையில், மூன்றாவது சீசனிற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
மூன்றாவது சீசன் கடந்த 2020-ஆம் ஆண்டில் வெளியானது. 8 எபிசோடுகளுடன் வெளியான இந்த சீசன், எதிர்பார்த்தவர்களை ஏமாற்றாத வகையில், இந்த சீசனின் கதையும் சிறப்பாகவே அமைந்தது. அதனால், அந்த சீசனும் ஹிட் அடித்தது. டார்க் தொடரின் ரசிகர்கள், “இப்பேர்ப்பட்ட தொடரை ஏன் மூன்று சீசனுற்குள் முடக்கி விட்டீர்கள்?” என அனைவரும் கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில், நெட்ஃப்ளிக்ஸ் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
‘பர்முடா ட்ரையாங்கில்’ பற்றிய கதையா?
டார்க் தொடரின் க்ரியேட்டர்ஸ் ஆன பாரன் ஓ ஆடர், ஜான்டே ஃபெரஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழு இணைந்து 1899 என்ற புதிய தொடரை உருவாக்கவுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மிரட்டலான பின்னனி இசையுடன் 1899 தொடரின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், What Lost will be found (எது தொலைந்ததோ, அது திரும்ப கிடைக்கும்) என குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கடலுக்கு நடுவில் முக்கோண வடிவில் ஆழம் இருப்பது போலவும் அந்த போஸ்டரில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொடர் மக்கள் அதிகம் காணாமல்போகும் பகுதியான ‘பர்முடா ட்ரையாங்கில்’ பற்றிய கதையாக இருக்குமோ என ரசிகர்கள் கருத்துகளை பரிமாறி வருகின்றனர். இத்தொடர், ‘டார்க்’ குழுவினரால் உருவாக்கப்படுவதால் இதற்கான எதிர்பார்ப்பும் பயங்கரமாக எகிறி வருகிறது. இந்த தொடரின் ரிலீஸ் டேட்டிற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.