நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வீடு எடுத்து கடலூர் மாவட்டம் ஆவட்டி கூட்டு ரோட்டில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி (32) என்ற பெண்ணிற்கு கருகலைப்பு செய்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனை அடுத்து ராமநத்தம் போலீசார் போலி மருத்துவர் சுரேஷ் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர், கஸ்தூரிக்கு கருக்கலைப்பு செய்த சுரேஷ் கடந்த மாதம் இவர் போலி மருத்துவர் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்ததன் பேரில் அங்கு திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவரது வீட்டில் ஏராளமாக மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது, இதனை அடுத்து ராமநத்தம் போலீசார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் சிறையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமில் வெளியில் வந்த சுரேஷை மீண்டும் கைது செய்தனர்.
இதே போல கடந்த மே மாதம் ஏழாம் தேதி கடலூர் மாவட்டம் ராமநத்ததை சேர்த்த அனிதா என்ற பெண் பெரம்பலூரில் கருக்கலைப்பு செய்து கொண்டதால் உயிரிழந்தார். தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூர் தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்து கொண்ட அமுதா உயிரிழந்தார்.
அனிதா உயிரிழந்த போது கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனை மற்றும் கேன் சென்டர்கள் கண்டறிய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார், ஆனால் கடந்த ஆறு மாதத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது கருக்கலைப்பு செய்து கஸ்தூரி என்ற பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வரை கருக்கலைப்பை தடுக்க அமைக்கப்பட்ட குழு என்ன செய்கிறது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதிகளில் தொடர்ந்து போலி மருத்துவர்கள் அதிகரித்து வருவதும் கருகலைப்பில் பெண்கள் உயிரிழப்பதும் தொடர்கதை ஆகி உள்ளது. பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் சென்று பலர் கருக்கலைப்பு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இதுபோன்ற உயிரிழப்புகளையும், சட்டவிரோதமான கருகலைப்புகளையும் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை வைக்கின்றனர்.