தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப்-1 பணியிடங்களை நிரப்புவதற்கான,  தேர்வு தொடர்பான தகவல்கள், டிஎன்பிஎஸ்சியின் 2023ம் ஆண்டுக்கான  தேர்வு அட்டவணையில் இல்லாமலிருந்த நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்நிலைத் தேர்வு 2023 நவம்பர் 23ம் தேதியும், முதன்மைத் தேர்வு 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 24ம் தேதி  நடைபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குரூப்-1 தேர்வு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எத்தனை பணியிடங்களுக்காக, தேர்வுகள் நடத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Continues below advertisement

இளைஞர்கள் ஆர்வம்:

கால் காசாக இருந்தாலும் கவர்ன்மெண்ட் காசாக இருக்க வேண்டும் என்பது மிகவும் பழமையான மொழியாக இருந்தாலும், இன்றளவும் பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அதனை நிறைவேற்றவே ஒவ்வொரு முறை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று, தேர்ச்சி பெற்று அரசு வேலையை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சில நூறு காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பதை பார்த்தே, அரசு வேலைக்கு இளைஞர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். பொதுவாக தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை  நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

Continues below advertisement

அண்மையில் வெளியான தேர்வு அட்டவணை:

அந்த வகையில் அண்மையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது.  அதில், அண்மையில் நடந்து முடிந்த முதல் நிலை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதிகள் வெளியிடப்பட்டது.

அடுத்தப்படியாக ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 828 இடங்களுக்கும், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில், சாலை ஆய்வாளர் பணியில் காலியாக இருக்கும் 762 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு மே மாதம் நடைபெறும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில், 101 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும். தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும், எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சுற்றுலா துறையில் உதவி அலுவலர் பணி நிலை 2-ல் 17 பணியிடங்களும், உதவி புவியியலாளர் பணியிடங்களில் 19 இடங்களும், விளையாட்டு இயக்குனர் பணியில் 12 இடங்களும், தமிழ்நாடு கால்நடை சேவை துறையில் உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தில் ஐந்து இடங்களும் என 11 பிரிவுகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியாகும் எனவும், அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.  ஆனால், அதில் குரூப் 1 பதவிகளுக்கான அறிவிப்புகள் குறித்த தகவல் அந்த அட்டவணையில் இடம்பெறாமல் இருந்தது. இது இளைஞர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது குரூப்-1 தேர்வுக்கான உத்தேச தேர்வு அட்டவணையை, தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.