சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது புழுதி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 36). பழனியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் வீட்டிற்கு நாமக்கல் மாவட்டம் இறையமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 41) என்ற ஜோதிடர் வந்துள்ளார்.
வீட்டில் புதையல்:
அப்போது ஜோதிடர் செல்வராஜிடம், பழனியம்மாள், " வீட்டில் அடிக்கடி தகராறு வருகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் சேர்வதில்லை. என்ன செய்ய வேண்டும்" என கேட்டுள்ளார். அப்போது ஜோதிடர் செல்வராஜ் உங்கள் வீட்டு சாமி அறையில் புதையல் இருக்கிறது. நான் எடுத்து தருகிறேன். புதையல் எடுத்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும். இதற்கு பூஜைகள் செய்ய வேண்டும். அதற்கு பணம் கொஞ்சம் செலவு ஆகும் என தெரிவித்துள்ளார்.
பின்னர் செல்வராஜ், பழியம்மாள் வீட்டில் பூஜை செய்துள்ளார். இந்த பூஜை முடிந்ததும் செல்வராஜ், மேலும் சில பூஜைகள் செய்ய வேண்டியது இருக்கிறது. அதற்கு பணம் தேவைப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்திருக்கிறார். இது உண்மை என நம்பிய பழனியம்மாள், அவரது கணவர் முருகேசனுக்கு தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து ரூபாய் 40 ஆயிரம் வாங்கி வந்து இந்த பணத்தை செல்வராஜ் தெரிவித்த செல்போன் எண்ணிற்கு கூகுள் பேவில் அனுப்பி வைத்தார்.
1 லட்சம் மோசடி:
இதன் பிறகு செல்வராஜ் மீண்டும் பழனியம்மாளிடம் ரூபாய் நாற்பதாயிரம் போதாது. மேலும் ஒரு 60 ஆயிரம் தாருங்கள் என கேட்டுள்ளார். இதனால் பழனியம்மாள் வீட்டில் இருந்த மேலும் சில நகைகளை அடகு வைத்து ரூபாய் 60 ஆயிரத்தை செல்வராஜை வரவைத்து கொடுத்துள்ளார். அதன்பின் செல்வராஜ், பழனியம்மானிடம் ஒரு வாரம் கழித்து வருகிறேன். வீட்டில் பூஜை செய்து புதையல் எடுத்து தருகிறேன் என்று தெரிவித்துச் சென்றார்.
ஆனால் மீண்டும் செல்வராஜ் வரவில்லை. பலமுறை பழனியம்மாள் செல்வராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்வராஜ் செல்போனை எடுக்கவில்லை. பின்னர் செல்போன் அணைக்கப்பட்டு விட்டது. அப்போதுதான் பழனியம்மாளுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. பிறகு இது குறித்து கணவன் முருகேசனிடம் தெரிவித்து புதையல் எடுத்து தருவதாக தெரிவித்து செல்வராஜ் என்ற ஜோதிடர் ரூபாய் ஒரு லட்சத்தை ஏமாற்றி வாங்கி சென்றதை தெரிவித்தார்.
போலி ஜோதிடர் கைது:
இதனை அறிந்த முருகேசன் அதிர்ச்சி அடைந்து, பின்னர் இது குறித்து வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கரிடம் தனது மனைவியை ஏமாற்றி பணம் பறித்த ஜோதிட செல்வராஜை பிடித்து ரூபாய் ஒரு லட்சம் பெற்றுத் தருமாறு புகார் கொடுத்தார். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி மற்றும் வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் மற்றும் காவல் உதவியாளர் உதயகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் ஜோதிடர் செல்வராஜிற்கு கூகுள் பெயரில் பணம் அனுப்பிய செல்போனை வைத்து செல்வராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் நேற்று முன்தினம் செல்வராஜ் கைது செய்யப்பட்டு வாழப்பாடி அழைத்து வரப்பட்டார். செல்வராஜ் வைத்து இருந்த ரூபாய் 30 ஆயிரம் மற்றும் ஜோதிடம் கூற பயன்படுத்தி வந்த செம்பு கலசம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது, தொடர்ந்து வேறு யாரிடமாவது இதுபோன்று பண மோசடியில் செல்வராஜ் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து காவல்துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.