புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அமெரிக்காவின் ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு, நடிகர் ஜெர்மி ரென்னர் குடும்பத்துடன் சென்று இருந்தார். அப்போது அங்கு வீசிய பனிப்புயலால், சாலைகளில் பல அடி உயரத்திற்கு பனி படிந்தது. இதனை தன்னிடம் இருந்த பனி அகற்றும் வாகனத்தை கொண்டு ஜெர்மி ரென்னர் தாமாகவே சுத்தம் செய்தார். பின்பு சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, பேசிக்கொண்டிருந்த போது திடீரென வாகனம் பின்னோக்கி நகர்ந்தது. இதனை கண்ட ஜெர்மி ரென்னர் உடனடியாக, வாகனத்தின் மீது ஏறி அதனை நிறுத்த முயன்றார்.


ஜெர்மி மீது ஏறிய 6 டன் எடையிலான வாகனம்:


அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அவர் மீது, 6 டன் எடையிலான அந்த வாகனம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த ரென்னர் ஹெலிகாப்டர் மூலமாக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து, இரண்டு வார கால தீவிர சிகிச்சைக்குப் பின், ஜெர்மி ரென்னர் வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், விபத்தில் தனக்கு 30 எலும்புகள் உடைந்ததாக தெரிவித்துள்ளார்.






”உடைந்த 30 எலும்புகள்”


அந்த பதிவில், ”காலை உடற்பயிற்சிகள், தீர்மானங்கள் அனைத்தும் இந்த குறிப்பிட்ட புத்தாண்டை மாற்றியுள்ளது. எனது முழு குடும்பத்திற்காகவும் சோகத்திலிருந்து விடுபட்டேன், விரைவில் செயல்படக்கூடிய அன்பை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தினேன். ❤️ எனது குடும்பம் மற்றும் என் மீதான அனைவரது சிந்தனை மற்றும் ஆதரவிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.


உங்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும் பாராட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடனான அன்பும் பிணைப்பும் ஆழமடைவதைப் போலவே, இந்த 30-க்கும் மேற்பட்ட உடைந்த எலும்புகள் சரியாகி, வலுவடையும். உங்கள் அனைவருக்கும் அன்பும் ஆசிகளும் 🙏❤️” என ஜெர்மி ரென்னர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைக்குப் பின்பு கடந்த 4ம் தேதி  மருத்துவமனை படுக்கையில் இருந்து அவர் வெளியிட்ட பதிவில், டைப் செய்ய முடியாத அளவிற்கு தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உங்களது ஆதரவான கருத்துக்கு நன்றி எனவும் கூறி தனது புகைப்படத்தையும் இணைத்து இருந்தார்.


மார்வெல் திரையுலகில் ஜெர்மி ரென்னர்:


உலகிற்கு வரும் ஆபத்துகளை சூப்பர் ஹீரோக்களை கொண்டு  தடுப்பதை மட்டுமே,  முக்கிய கதைக்களமாக கொண்டு மார்வெல் நிறுவனம் தனக்கென ஒரு தனி திரையுலகை கட்டமைத்துள்ளது. அந்நிறுவனத்தின் சார்பில் 2011ம் ஆண்டு வெளியான தோர் திரைப்படத்தில் கிளிண்ட் பார்ட்டன்/ஹாவ்க்-ஐ கதாபத்திரத்தில் அறிமுகமானார் ஜெர்மி ரென்னர்.


அதைத்தொடர்ந்து வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் ஜெர்மி முக்கிய பங்கு வகித்தார். மார்வெல் திரைப்படங்களில் அவர் இடம்பெறும் அணியானது, இதுவரை தோல்வியையே சந்தித்தது இல்லை. அவெஞ்சர்ஸ், ஏஜ் ஆஃப் அல்ட்ரான், சிவில் வார் மற்றும் எண்ட் கேம் என அனைத்து திரைப்படங்களிலும், ஜெர்மி ரன்னர் நடித்த ஹாவ்க்-ஐ கதாபாத்திரம் இடம்பெற்ற அணி தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.