Crime: பீகாரில் நான்கு பேர் கொண்ட கும்பல், ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தகராறு
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டம் பஸ்ரஹா கிராமத்தைச் சேர்ந்தவர் சுலேகா தேவி(42).சில ஆண்டுகளாக இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிப்பர்களுடன் நிலப்பிரச்சனை காரணமாக சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2014ஆண்டு சுலேகா தேவியின் கணவர் மற்றும் மைத்துனர் இந்த நிலப்பிரச்சனை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அந்த பெண், அவரது நெல் வயலில் நாற்றுக்களை நட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பைக்கில் வந்த 4 பேர் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கினர். பின்பு, அவரை பலமுறை கட்டையால் அடித்துள்ளனர். அந்த பெண்ணின் கண்களை கத்தியால் நோண்டி எடுத்தனர். பின்னர், அவரது நாக்கை அறுத்து, பிறப்புறுப்பை சிதைத்தனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்த உயிரிழந்துள்ளார்.
பெண் கொலை
பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் இரண்டு பேரை கைது செய்து தலைமறைவாக உள்ளவர்கள் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “உயிரிழந்த பெண்ணிற்கும் அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த பெண்ணின் கணவர் மற்றும், அவரது உறவினர் நிலத்தகராறு பிரச்சனையால் கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளோம். மேலும், தலைமறைவாக உள்ளவர்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
இதற்கிடையில், பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். நிலத்தகராறில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime : சென்னையில் போதை மாத்திரை..! கஞ்சா பறிமுதல்..! ஆன்லைன் மூலம் நடந்த விற்பனையா ?