என்னுடைய ஒருநாள் சிறுகதை, படத்தின் காட்சியை யோசிக்காமல், பார்க்காமல் கடக்காது  என கொலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.


இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘கொலை’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் என பலரும் நடித்துள்ளனர். சிவக்குமார் விஜயன் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இப்படம் ஜூலை 21 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதனிடையே கொலை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் மிஷ்கின், “கொலை படத்தின் ட்ரெய்லர் ரொம்ப அழகாக இருந்தது. பொதுவாக தமிழ் சினிமாவில் க்ரைம் த்ரில்லர் படங்கள் எடுத்த இயக்குநர்கள் பற்றி  ஒரு எண்ணம் இருக்கிறது. முதலில் ஒரு உதவி இயக்குநருக்கு படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயக்குநர்கள் ஸ்டான்லி குப்ரிக், ஹிட்ச்காக் போன்றவர்களின் படங்களில் ஒரு கலையை பார்த்து விட்டு வருவது தான்.


எந்த உலக சினிமாவாக இருந்தாலும் கூத்துக்கலையில் இருந்து தான் வந்தது. அந்த காலக்கட்டத்தில் பி.மாதவன், திருலோகச்சந்தர் ஆகியோரின் படங்கள்  காட்சிகளில் கேமரா கோணத்தை முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இருந்தது. இப்படியான நிலையை அறிந்து படம் பண்ணுபவர்கள் குறைவு. இப்படி படம் பண்ணுபவர்களை, ஏன் என்னையே சினிமாத்துறையினரே ‘கொலை படம் எடுக்கிறவர்’ என சுருக்கி விடுவார்கள். என்னுடைய ஒருநாள் சிறுகதை, படத்தின் காட்சியை யோசிக்காமல், பார்க்காமல் கடக்காது.


இந்த படத்தின் டைட்டில் ‘கொலை’யின் எழுத்து வடிவத்தைப் பார்த்தாலே டிசைனருக்கும், இயக்குநருக்கும் சண்டை வந்திருக்கும் என நினைக்கிறேன். டைட்டில் வடிவத்தில் ஒட்டுமொத்த படத்தையும் புரிய வைக்க முடியுமா என பார்க்க வேண்டும்.


அப்படி கொலை படத்தை பார்க்கும்போது குப்ரிக், ஹிட்ச்காக் ஆகியோரின் கிளாஸிக்கான படங்களின் டைட்டில் தான் நியாபகம் வருது. கொலை படத்தின் களம் என பார்த்தால், ‘ஒரு மனிதன் ஏன் கொலை பண்ணுகிறான்?, எல்லோரும் சின்ன வயசுல கையில் நகத்தை வெட்டும் போதும், கீழே விழும் போது காயத்தால் ஏற்படும் இரத்ததை பார்த்து பயப்படுகிறோம். ஆனால் அதே மனிதன் கொலை பண்ணும்போது ஏற்படும் அந்த உணர்வை புரிந்து கொள்ள முடியுமா ? என்றால் இல்லை. சொல்லவே முடியாத வலி அது. அந்த இடத்திற்கு மனிதனை உந்தப்பட காரணம் என்ன? .. மனதளவில் பாதிக்கப்படுவது தான். 


நான் போய் சில கொலைகாரர்களை பார்த்துள்ளேன். ஏதோ ஒரு புயல் அவர்களின் இதயத்தில் சுற்றி சுழல்கிறது. இறப்பு நம்மை நெருங்கியவர்களிடத்தில் நடக்கும்போது தான் உறுத்தலாக தெரிகிறது. பைபிளில் இரண்டாவது சீன் கொலை, ராமாயணம், மகாபாராதம் என இதிகாசங்கள் முழுக்க கொலை தான் உள்ளது.  ஷேக்ஸ்பியர் நாவல் கொலை பற்றி சொல்கிறது. ஒவ்வொரு கொலையும் என்பது நாம் வாழ்க்கையை எதுக்கு வாழ்கிறோம்?, சக மனிதனை எப்படி பார்க்கிறோம் ? என்பதை தான் யோசிக்க வைக்கிறது, சொல்லிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் கொலைக்கதையை எடுக்கும் போது இயக்குநர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும். அந்த மாதிரி படமாக கொலை படம் இருக்கும் என நினைக்கிறேன்” என இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.