சேலம் மாவட்டம், தாரமங்கலம், தாண்டவனூர் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார், சென்னை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். சம்பத்குமாருக்கு திருமணமாகி சரஸ்வதி எனும் மனைவியும்  மூன்று குழந்தைகளும் உள்ளனர்,


திருமணத்தை மீறிய உறவு


இச்சூழலில் தாரமங்கலத்தைச் சேர்ந்த அமிர்தவள்ளி எனும் பெண்ணும் சம்பத்குமாரும் சுமார் 15 ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமிர்தவள்ளி கணவனை இழந்தவர். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இவர் தாரமங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளி சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில், தன்னைவிட்டு விட்டு அமிர்தவள்ளியுடன் சம்பத்குமார் அதிக நேரம் செலவழித்து வந்ததால் மனமுடைந்த சரஸ்வதி, அமிர்தவள்ளியின் விட்டில் சம்பத்குமார் இருந்த சமயம் பார்த்து வீடு தேடிச் சென்றுள்ளார். 


தப்பியோடிய ஆயுதப்படை காவலர்:


இந்நிலையில், தன் மனைவியைப் பார்த்ததும் சம்பத்குமார் அங்கிருந்து வெளியேறி ஓடியுள்ளார். தொடர்ந்து வீடுபுகுந்த சரஸ்வதி தன் கணவருடன் உறவில் இருந்து வந்த அமிர்தவள்ளியை தாக்கத் தொடகியுள்ளார். தொடர்ந்து இருவரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டதுடன், குடுமிப்பிடி சண்டை போட்டபடியும் நடு ரோட்டுக்கு வந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் இவர்களை சமாதானம் செய்து பிரித்து வைத்துள்ளனர்.


தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முன்னதாக இரண்டு தரப்பினரும் புகார் தெரிவித்த நிலையில், தாரமங்கலம் காவல் துறையினர் முன்னதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதனிடையே சம்பத்குமாரின் திருமணம் மீறிய உறவு தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முந்தைய சம்பவம்


இதேபோல் முன்னதாக திருமணம் மீறிய உறவில் இருந்த மனைவி காதலனுடன் சேர்ந்து தன் கணவனைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள படாளம் அருகே உள்ள நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (45) . இவர் மனைவி கவிதா (36). சுகுமார் செங்கல்பட்டில் செயல்பட்டில் உள்ள இறைச்சி கடையில் பணியாற்றி வந்துள்ளார். கவிதா நடராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இரவு நேரங்களில் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.  


இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கவிதாவிற்கும் அங்கு பணிபுரியும் மற்றொரு நபருக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. கவிதாவும் அவருடைய ஆண் நண்பரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.‌ இதுகுறித்த தகவலும் கணவர் சுகுமாருக்கு தெரியவர இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும், ஊர் இது குறித்து தவறாகப் பேசுகிறது எனவும் கண்டித்துள்ளார். 


மனைவி சதித்திட்டம்:


கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதுகுறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டு சில நாட்கள் பிரிந்தும் இருந்துள்ளனர். கணவன் தனது திருமணம் தாண்டிய உறவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டுக் கொண்டு வருவதால், கணவனின் கதையை முடித்து விட வேண்டும் என மனைவி கவிதா சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து கணவர் சுகுமாரின் அண்ணனான மணி என்பவரிடம் 400 ரூபாய் பணம் கொடுத்து, இரண்டு மது பாட்டில்களை வாங்கி வரச் சொல்லியுள்ளார். அவரும் வாங்கி வந்த  மதுவை  கவிதாவிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளார் . அதில் ஒரு பாட்டிலை மணியிடம் கொடுத்துவிட்டு, ஒரு பாட்டிலை மட்டும், இவர் எடுத்துச் சென்று அந்த மது பாட்டிலில் சிரஞ்சி மூலம் மதுவில் விஷம் கலந்துள்ளார்.  தொடர்ந்து அடுத்த நாள் மதுபாட்டிலை கவிதா தன் கணவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏற்கனவே சுகுமார் குடித்திருந்ததால் இந்த மது பாட்டிலேயே வேறொரு நாள் குடித்துக் கொள்ளலாம் என பத்திரப்படுத்தி எடுத்து வைத்துள்ளார் சுகுமார்.


மறுநாள்  காலையில், அவர் வேலைக்கு செல்லும் பொழுது இந்த மதுபாட்டிலும் எடுத்துச் சென்றுள்ளார்.‌ மதியம் உணவு நேரத்தின்போது மதுவை குடிக்க முயன்றபோது அவருடன் பணி செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவருடைய பல ஆண்டுகால நண்பருமான ஹரிலால் (40) என்பவர் தனக்கும் மதுவில் பங்கு கேட்டுள்ளார், இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்திவிட்டு உணவு முடித்துக் கொண்டு மீண்டும் வேலைக்கு செல்லும் பொழுது, இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஹரிலால் அங்கே மயங்கி விழுந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 


சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:


பிறகு வீட்டுக்குச் சென்ற சுகுமாரின் நிலைமையும் மோசமாக, அவரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையின் போது இருவரும் குடித்த மதுவில் விஷம் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் தான் இவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் படாளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் மனைவி கவிதா மீது சந்தேகம் வர அவரை அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் மதுவில் விஷம் கலந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முன்னதாக உயிரிழந்தனர்.