தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் 28 வயது பட்டதாரி பெண். இவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தனியார் செயலில் முயன்ற போது பெண்ணின் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் அவருடைய புகைப்படம் ஆகியவற்றை பதிவிடும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் இருந்த அனைத்தையும் அவர் பதிவேற்றம் செய்தார். சில நிமிடங்களில் பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.20 ஆயிரம் வந்துள்ளது. மேலும் அதில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி அந்த பட்டதாரி பெண் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திவிட்டார்.



இந்நிலையில் அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் என் வங்கி கணக்கிற்கு மேலும் பணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்களது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் தன்னுடைய அம்மாவிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினர்.

இருப்பினும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அந்த பெண்ணின் படத்தை மார்பிங் செய்து அனுப்பப்பட்டது. இதனை அந்த பெண் பார்த்ததும் அந்த குறுந்தகவல் அழிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டு பணம் செலுத்த வேண்டும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். இவ்வாறாக மர்ம நபர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதும், அந்தப் பெண் பணம் அனுப்புவதுமாக இருந்தார். இதன்படி பல்வேறு தவணைகளாக ரூ.16.31 லட்சம் பணத்தை அந்தப் பெண் செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து மிரட்டல் வரவே அந்த பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் ( பொ ) மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





சுற்றுலாவாக வந்த பெண் மயங்கி விழுந்து பலி

தஞ்சைக்கு சுற்றுலா வந்த பெங்களூருவை சேர்ந்த பட்டதாரி பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராமன் ஜினப்பா. இவர் தனது பட்டதாரி மகளான நவீனா (25 ) மற்றும் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலாவாக வந்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.

கடைசியாக தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி செல்ல நினைத்தனர். அதன்படி கடந்த 31-ந் தேதி பெரிய கோவிலுக்கு சுற்றி பார்க்க வந்தனர். கோவிலை சுற்றி பார்த்து கொண்டிருந்த போது நவீனா திடீரென மயங்கி விழுந்தார்.

உடன் அவரை குடும்பத்தினர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நவீனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை ராமன்ஜினப்பா தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.