யூடியூப் பார்த்து நகை கடை சுவரில் ஓட்டை போட்டு திருட முயன்ற இன்ஜினீரை போலீஸார் கைது செய்தனர்.
பத்ரி என்பவர், ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தில் உள்ள கடைத் தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு மேல் உள்ள வீட்டில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கடையின் உரிமையாளர் கடையை மூடிவிட்டு தனது வீட்டுக்கு சென்ற நிலையில், நள்ளிரவில் வீட்டின் சுவர் இடிக்கும் சத்தம் தூங்கிக்கொண்டிருக்கும் சீனிவாசனுக்கு கேட்டுள்ளது. உடனே கீழே இறங்கி வந்த பார்த்த அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த அதிர்ச்சிக்கு காரணம், நகைக்கடை சந்தில் ஒருவர் கடையின் சுவரை இடித்துக்கொண்டிருந்தார். சீனிவாசனை கண்டதும், அந்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.
இதனைத்தொடர்ந்து, சீனிவாசன் கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுக்க, அவரை இதுகுறித்து போலீசாரிடம் கூறினார். அவர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது நகைக்கடை சுவரில் ஒரு நபர் நுழையக்கூடிய அளவில் ஓட்டை போட்டு திருட முயற்சி நடந்ததை கண்டுபிடித்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சத்தியமங்கலம் போலீசார், திருட முயன்ற நபரை பிடிக்க தனிப்படை அமைத்தது. அந்த தனிப்படை தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் கரூர் அருகேயுள்ள மலையபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ராஜபாண்டியன் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் டிப்ளோமோ இன்ஜினியரிங் படித்துள்ளதாகவும், நூற்பாலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருவதாகவும் கூறினார். மேலும், தனக்கு அதிக கடன் இருப்பதால், அதில் இருந்து தப்பிக்க நினைத்து யூடியூப் சேனலில் திருடுவது சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்து நகைக்கடையில் திருட முயற்சித்ததாகவும் கூறினார். ராஜபாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்