விருத்தாசலத்தில் ஓசிக்கு மதுபாட்டில்கள் கேட்டு தராத டாஸ்மாக் ஊழைியர்களைக் கடைக்குள் வைத்து பூட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


மதுக்கு அடிமையானவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. ஒரு நாள் கூட அவர்களால் மது அருந்தாமல் இருக்கவே முடியாது. இதற்காக பல குற்றச்சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் விருநதாசலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக ஓசிக்கு மது கேட்டுக் கொடுக்காத ஊழியர்களை  டாஸ்மாக் கடைக்குள் வைத்து மதுப்பிரியர் ஒருவர்   பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





விருத்தாசலம் அருகே உள்ள ஏனாதிமேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை  ஒன்று இயங்கி வருகிறது. இக்கடைக்கு அதே பகுதியைச்சேர்ந்த 27 வயதான கவியரசன் தினமும் வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு முறை வரும் போது அங்குள்ள ஊழியர்களிடம் பணம் எதுவும் கொடுக்காமல் ஓசிக்கு மதுபாட்டில்கள் தருமாறு கேட்பார் எனவும் இதனையடுத்து அங்குள்ள ஊழியர்கள் அவரை திட்டி அனுப்பி வைப்பார்கள் எனக் கூறப்படுகிறது.


இந்நிலையில் தான்  நேற்று முன்தினமும் கவியரசன், வழக்கம் போல் ஏனாதிமேடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து ஓசிக்கு மதுபாட்டில் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் தர மறுத்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த கவியரசன், மதுபாட்டில் தர மறுத்த ஊழியர்களை ஆபாசமாக திட்டியதோடு, அவர்களைக் கடைக்கு உள்ளேயே வைத்து ஷட்டரை இழுத்து பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். 


இதனையடுத்து என்ன செய்வது என்று அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இதுக்குறித்து விருத்தாசலம் காவல்நிலையத்திற்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளனர். இந்த புகாரினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், டாஸ்மாக் கடையின் ஷட்டரை திறந்து டாஸ்மாக் கடை ஊழியர்களை மீட்டனர். பின்னர் என்ன நடந்தது? என பாதிக்கப்பட்ட  டாஸ்மாக் ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசன் என்பவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மது போதையில் இளைஞர் ஒருவர் செய்த இச்செயல் அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.





நாளுக்கு நாள் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் மதுப்பழக்கத்தினால் தான் இதுப்போன்ற குற்றச்சம்பவம் அரங்கேறிவருவதாகவும், இதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். மேலும் பெற்றொர்களும் நமது குழந்தைகள் என்ன மனநிலையில் உள்ளார்கள்? யாருடன் பழகுகிறார்கள்? போதைப் பழக்கத்திற்கு எதுவும் அடிமையாகிறார்களா? என்பது குறித்து கவனித்துக்கொள்ள வேண்டும் என குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். அப்போது தான் இதுப்போன்ற குற்றச்சம்பங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.