ஐபிஎல் தொடரை அடுத்து, டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பித்துள்ளது. இத்தொடரில் சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்கான தகுதிப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியைத் தோற்கடித்து ஓமன் கிரிக்கெட் அணி புதிய சாதனையைப் படைத்தது. இந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய இரண்டு வீரர்களில் ஒருவர் பஞ்சாப்பை சேர்ந்த ஜதிந்தர் சிங்.
யார் இந்த ஜதிந்தர் சிங்?
டி-20 உலக்ககோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் பி பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணிக்கு 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்க்கு 129 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து களமிறங்கிய ஓமன் அணியின் ஓப்பனிங் பேட்டர்கள் அக்யூப் இல்யாஸ், ஜதிந்தர் சிங் ஆகியோர் அதிரடி தொடக்கத்தை தந்தனர்.
பஞ்சாபில் பிறந்த ஓமனில் செட்டிலான ஜதிந்தர் சிங், மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் 130 ரன்கள் என்ற இலக்கை 13.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து ஓமன் அணி அபார வெற்றி பெற்றது. ஜதிந்தர் சிங் 43 பந்தில் 4 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரியுடனும் 73 ரன்களுடனும், அகிப் இலியாஸ் 43 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது ஓமன் அணி.
பஞ்சாப் மாநில லூதியானவைச் சேர்ந்த ஜதிந்தர் சிங், தனது 13 வயதில் குடும்பத்தோடு இந்தியாவில் இருந்து ஓமனில் குடியேறினார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்த அவர், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஓமன் கிரிக்கெட் அணியில் விளையாடியவர். அதனை அடுத்து சீனியர் அணியிலும் இடம்பிடித்த அவர், ஓமன் கிரிக்கெட்டின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை தனது முன்மாதிரியாக கொண்டிருக்கும் ஜதிந்தர் சிங், டி-20 உலக்ககோப்பை முதல் போட்டியில் அரை சதம் கடந்தவுடன், தவான் ஸ்டைலில் தொடையில் தட்டி தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
32 வயதாகும் ஜதிந்தர் சிங், கடந்த மாதம் நேபால் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 62 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒருங்கிணைக்கப்பட்ட கிரிக்கெட் அணிகளில், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் கடந்த இரண்டாவது வீரரானார். முதல் இடத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த கெவின் ஓ பிரயன் இருக்கின்றார்.
ஓமன் சாதனை
டி-20 உலககோப்பையில், ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு அடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்திய மூன்றாவது அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது ஓமன் அணி. இதற்கு முன்பு 2007ம் ஆண்டு இலங்கை நிர்ணயித்த102 ரன்களை விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியாவும், 2012ம் ஆண்டு ஜிம்பாப்வே நிர்ணயித்த 94 ரன்களை விக்கெட் இழப்பின்றி தென்னாப்பிரிக்க அணியும் எட்டிப்படித்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது ஓமன் அணியும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்