தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் சாக்லெட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த கங்கன் சிங் என்பவர் தனது மகனுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து சாக்லேட் கொண்டு வந்துள்ளார். 8 வயது சந்தீப் சாக்லேட் சாப்பிட்டபோது, அது தொண்டையில் சிக்கி மூச்சு திணறலை ஏற்படுத்தியுள்லது. இதையடுத்து சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனை மேற்கொண்டதில், அந்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சந்தீப் என்ற இரண்டாம் வகுப்பு மாணவன், வீட்டில் இருந்து சாக்லேட்டுகளுடன் கடந்த சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றுள்ளார். சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த சிறுவனுக்கு தொண்டையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
வாரங்கல் நகரத்தில் மின்சாரக் கடை நடத்தி வரும் கங்கன் சிங்கின் குடும்பத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கன் சிங், 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரங்கலுக்குச் சென்று தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
வகுப்பில் சாக்லேட் சாப்பிட்ட சிறுவன்:
கங்கன் சிங், ஆஸ்திரேலியா பயணத்தில் இருந்து திரும்பும் போது தனது குழந்தைகளுக்கு சாக்லேட் கொண்டு வந்துள்ளார். சந்தீப் சனிக்கிழமை தனது பள்ளிக்கு சில சாக்லேட்களை எடுத்துச் சென்றார். மதிய உணவின் போது பள்ளி பேக்கலில் வைத்திருந்த சாக்லேட்டை குழந்தை வெளியே எடுத்து சாப்பிட்டது. சாக்லேட்டை வாயில் போட்டதும் தொண்டையில் சிக்கியது. இதனால் வகுப்பில் விழுந்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க, அவரை அரசு எம்ஜிஎச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருந்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மூச்சுத் திணறல் தான் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் நடந்தது.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் 6 வயது சிறுமியும் தொண்டையில் சாக்லேட் சிக்கி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். சமன்வி பூஜாரி என்ற 6 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே பள்ளி பேருந்தில் ஏற முற்பட்ட போது இந்த விபத்து நடந்துள்ளது. சமன்வி பள்ளிக்கு செல்ல தயாராக இருந்தபோது, அவரது அம்மா சுப்ரிதா பூஜாரி சிறுமிக்கு சாக்லேட் கொடுத்தார். அதற்குள் பள்ளி வேன் வந்தது. இதைப் பார்த்த சமன்வி ரேப்பருடன் சாக்லேட்டையும் சேர்த்து சாப்பிட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக, பஸ்சின் கதவு அருகே மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இறந்தார்.