புதுச்சேரி காமராஜர் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (52). கோரிமேடு அருகே உள்ள தமிழக பகுதியான திருநகரில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். ஆயுத பூஜையையொட்டி நேற்று முன்தினம் இரவு வேலை செய்யும் தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்வதற்காக மணிவண்ணன் வந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து, முகம் என உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டு காயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.



இது குறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மணிவண்ணன் உடலை கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை  குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மணிவண்ணன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.


 



கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அருண் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வி,(49), அவரது மகன் ஜோஸ்வா (26), காமராஜர் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்த கரண் (22), காமராஜர் நகர் புதுத்தெருவை சேர்ந்த அஜய்குமார் (22), சாரம் வெண்ணிலா நகரை சேர்ந்த நரேஷ் (25), வில்லியனூர் காவேரி நகரை சேர்ந்த கோகுல் (எ) கோகுல்நாத் (24), கோரிமேடு ஜிப்மர் கேம்பஸ் பகுதியை சேர்ந்த டிராவிட் (21), கலைவாணர் நகரை சேர்ந்த ஆனந்தராஜ் (31) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 4 அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.




கைது செய்யப்பட்ட மாந்தோப்பு சுந்தர் மகன் ஜோஸ்வா போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் :


தனது தந்தை மாந்தோப்பு சுந்தர் கொலைக்கு பழிக்கு பழியாக சம்பந்தப்பட்ட யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக பிளான் போட்டு வந்தேன். முதலின் மணிவண்ணனின் மகன்கள் சுந்தர், வினோத் ஆகிய இருவரையும் கொலை செய்ய கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே திட்டம் தீட்டினோம். அவர்கள் ஊருக்குள் இல்லை என்பது தெரிய வந்தது. வினோத்தின் நண்பரான சந்தோஷ் என்பவரை கொலை செய்ய முடிவு செய்தோம். புதுச்சேரி போலீஸ் எச்சரித்ததால், அவரும் தலைமறைவாகி விட்டார்.


இதனால் சுந்தரின் குடும்பத்தில் ஒருவரை பழிவாங்க வேண்டும் என்று துடித்தேன். அதன் படி, அன்றிரவு கோரிமேடு அடுத்த திருநகருக்கு சுந்தரின் தந்தை மணிவண்ணன் பைக்கில் சென்றார். அவரை பின்தொடர்ந்து, கரண் தலைமையில், நாங்கள் வாட்டர் டேங்க் அருகில் பதுங்கியிருந்தோம். வெளியே வந்த அவரை துரத்திச்சென்று கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.