குடிபோதையில் பயணி ஒருவர் நடுவானில் தகராறு செய்த நிலையில் துபாய் விமானம் ஒன்று மும்பை சத்திரபதி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


மே 14 ஆம் தேதியன்று, துபாய் நாட்டின் தோஹா நகரில் இருந்து பெங்களூருவை நோக்கி ஒரு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சர்ஃபுதீன் உல்வார் என்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பயணித்தார். அவர் நல்ல குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. அந்த நபர் போதை தலைக்கேறிய நிலையில் விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். அந்த பெண் அவர் குடிப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.






ஆனால் அவரோ குடிப்பதை நிறுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இதனை அப்பெண் கண்டிக்கவே அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே சக பயணிகள் அப்பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட அவர்களுடனும் அந்த போதை ஆசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை யாராலும் சரி செய்ய முடியவில்லை. தன்னிலை உணர முடியாத போதையில் அந்த நபர் இருந்தார். 


உடனடியாக பைலட்டுக்கு தகவல் செல்ல, பைலட் கன்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டார். அங்கிருந்தவர்களின் ஆலோசனைக்கு இணங்க அந்த பைலட் விமானத்தை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி செலுத்தினார். அங்கிருந்த சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


அந்த நபரை சிஐஎஸ்எஃப் வீரர்கள் அழைத்துச் சென்ற நிலையில் விமானம் பெங்களூரு நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
விமானத்தை கட்டாயமாக தரையிறக்கம் செய்யும்படி நடந்து கொண்ட அந்த நபரின் மீது இந்திய தண்டனைச் சட்டம், விமான சட்டம் என பல்வேறு சட்டங்களின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


துபாய் நாட்டின் தோஹா நகரில் இருந்து நேரடியாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானம் போதை ஆசாமி செய்த களேபரத்தால் மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பிற பயணிகளுக்கு நேர விரயத்தை ஏற்படுத்தியதால் பயணிகள் குறித்த நேரத்தில் தரையிறங்க இயலாமல் சிரமத்துக்கு ஆளாகினர்.