பெங்களூரு ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகருக்கும், பெண் பயணிக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பொதுவாக பயணங்கள் மேற்கொள்பவர்கள் பயண சௌகரியம், குறைவான கட்டணம் ஆகியவை கணக்கில் கொண்டு பெரும்பாலும் ரயில் பயணங்களையே மேற்கொள்வார்கள். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தவிர பிற நபர்கள் உள்ளே நுழைவதையும், ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டால் பணியில் இருக்கும் காவல்துறையினரும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். 


ஆனால் பெங்களூருவில் குடிபோதையில் இருக்கும் டிக்கெட் பரிசோதகர் பெண் பயணியிடம் தகராறில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கேஆர் புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவில், பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை காட்டுமாறு கத்துகிறார். 






ஆனால் அப்பெண் நான் டிக்கெட் எடுத்துக் கொண்டு தான் இங்கு வந்துள்ளேன். வேறு ஒரு டிக்கெட் பரிசோதகரிடம் ஏற்கனவே காட்டிவிட்டேன் என அமைதியாக கூறுகிறார். உடன் அந்த நிலையத்தில் இருக்கும் பயணி ஒருவர், இந்தப் பெண் தனியாகப் பயணம் செய்கிறார். டிக்கெட் பரிசோதகர் அவளைக் துன்புறுத்தும்படி நடக்கிறார். எனக்கு அந்த பெண் யாரென்று தெரியாது. ஆனால் அந்த பரிசோதகர் அவளிடம் வாக்குவாதம் செய்வதை கண்டேன் என தெரிவிக்கிறார். 


ஆனால் டிக்கெட் பரிசோதகரோ எதையும் காதில் வாங்காமல் அப்பெண்ணிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார். அருகிலிருந்த மற்ற பயணிகள் அவரைத் தடுத்து, சட்டையைப் பிடித்து இழுத்து டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் இருந்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட  தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகரை இடைநீக்கம் செய்துள்ளது.


முன்னதாக லக்னோவில்   அகல் தக்த் எக்ஸ்பிரஸின் ஏ1 பெட்டியில் தனது கணவர் ராஜேஷ் குமாருடன் பயணம் செய்த பெண் பயணி மீது குடிபோதையில் டிக்கெட் பரிசோதகர் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் தகராறு செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.