கடந்த சில தினங்களுக்கு முன்  மதுரை இஸ்மாயில்புரம் 6ஆவது தெருவில் தனியாருக்கு சொந்தமான கிட்டங்கியில் சட்டவிரோதமாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. குடோனுக்கு சென்ற காவல்துறையினர் பன்னீர் செல்வம் என்பவருக்கு சொந்தமான 2 குடோன்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது, சுமார் 1200க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் இந்திய புகையிலை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத 3 டன் போலியான சிகரெட் பெட்டிகள் இருப்பது தெரியவந்தது.

 


 

அதனைத் தொடர்ந்து போலி சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் குடோன் கண்காணிப்பாளர் பிரபுவை கைது செய்து விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடோனின் உரிமையாளர் பன்னீர் செல்வம் சட்டவிரோதமாக தென் மாவட்டங்களுக்கு சாக்லேட் பாக்கெட்டுகள் விற்பனை செய்வது போன்று புகையிலை மற்றும் போலி சிகரெட்களை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.



 

மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவரது உத்தரவின் பேரில் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால்  மதுரை மாநகர் பகுதிகளில் முழுவதும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. குட்கா, புகையிலை பொருட்களை கடத்துபவர்கள், பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மதுரை பாலரெங்கபுரம் பகுதி வழியாக சரக்கு லாரிகள் அடிக்கடி வேகமாக சென்று வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.




 

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த லாரியை சோதனையிட்ட காவல்துறையினர் லாரியில் வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனை செய்த போது, 400 கிலோ அளவிலான குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த தனிச்சியம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் இடைத்தரகர் முத்துராஜ், குடோன் உரிமையாளர்  விஜய் ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டு, 400 கிலோ குட்கா, புகையிலை பொருட்களும், குட்கா கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும்  இரண்டு இருசக்கர வாகனம், 25 ஆயிரம் ரூபாயை தெப்பக்குளம் காவல்துறையினர் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.