ஆற்காடு அருகே நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படப் பாணியில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து  நிதிநிறுவன உரிமையாளரிடம் இருந்து  ஆறு லட்ச ரூபாய் அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்கிற ஆட்டோ கண்ணன் வயது (47) இவர் அப்பகுதியில் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார்.  இந்நிலையில் கடந்த 30.7.2021 அன்று மதியம் அவரது வீட்டிற்கு இன்னோவா காரில், ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு , கண்ணனின் வீட்டைச் சோதனை செய்ய வந்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர் .

 



 

அதற்கு ஆட்டோ கண்ணன் தங்களிடம் சோதனை செய்வதற்கான ஆணை உள்ளதா எனக் கேட்டுள்ளார் அதற்கு அவர்கள் அதை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் கண்ணன் தான் ஆண்டொன்றிற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி செலுத்துகிறேன் , எனது ஆடிட்டரிடம் இதற்கான  ஆவணங்கள் உள்ளது எனவே எனது ஆடிட்டரிடம் பேச அனுமதி தாருங்கள் என்று தெரிவித்துள்ளார் கண்ணன் . 

 

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் பொது இதற்கெல்லாம் அனுமதி இல்லை என்று தெரிவித்த அந்த கும்பல் , கண்ணன் கூறுவதை எதையும் காதில் வாங்காமல், வீட்டிலிருந்த அனைவரது செல்போனையும் வாங்கி சுவிட்ச் ஆப் செய்து விட்டு, தொடர்ந்து  சோதனையை மேற்கொண்டுள்ளனர் .

 



 

2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையின் முடிவில் , அந்த கும்பல் அவர் வீட்டிலிருந்த  ரூபாய் 6 லட்சம் ரொக்க பணம்  மற்றும் 60 சவரன் தங்க நகையைக் கைப்பற்றி , கைப்பற்றப்பட்ட நகை பணத்திற்கு , உரிய ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளனர்.  60 சவரன் நகைகளுக்கான ரசீதைக்  சமர்ப்பித்த நிலையில் , ரொக்க பணம் 6 லட்ச ரூபாய்க்கு தேவையான ஆவணம் கண்ணனிடம் இல்லை .

 

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கும்பல் பணம் 6 லட்ச ரூபாயை அபேஸ் செய்ய முடிவு செய்தனர் , அதன்படி , கண்ணனிடம் , தாங்கள் கைப்பற்றியுள்ள ரொக்க பணம் 6 லட்சத்தை , எடுத்துச்செல்வதாகவும் , கைப்பற்றப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை  வேலூரில் உள்ள எங்களது வருமான வரித்துறை  அலுவலகத்தில் சமர்பித்துவிட்டு , பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கூறிவிட்டு , அவர்கள்  வந்த இன்னோவா காரில் மின்னல் வேகத்தில் தப்பித்துச் சென்றுனர் .

 



 

 இந்நிலையில் இது குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆட்டோ கண்ணன் விசாரித்தபோது இது போன்று எந்த சோதனையும் மேற்கொள்ளவில்லை என்று வேலூர் மற்றும் சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . 

 

 இதனால் அதிர்ச்சி அடைந்த தனது  வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் வந்த சிசிடிவி வீடியோ ஆதாரங்களுடன்  , ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 



 

 இதனடிப்படையில் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் உத்தரவின் பேரில் ஆற்காடு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவம் குறித்து சிசிடிவி வீடியோ உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில் அந்த காரின் பதிவு எண் போலியானது எனவும் அது இருசக்கர வாகனத்தின் பதிவு எண் எனவும்  தெரியவந்துள்ளது . தொடர்ந்து தனிப்படை அமைத்து , 6 லட்ச ரூபாயை  அபேஸ் செய்த கும்பலை ஆற்காடு போலீசார் தேடி வருகின்றனர் . 

 



 

நடிகர் சூரியா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்'  திரைப்பட பாணியில் , பட்டப்பகலில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து  6 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.