வேலூரில் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரும் கைது

தலைமறைவாக இருந்த சந்தோஷ் சிக்கிய நிலையில், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Continues below advertisement

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பீகாரை சேர்ந்த பெண் மருத்துவர் பணிபுரிந்து வந்தார். இவர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் நண்பருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்க்க சென்றார். சினிமா முடிந்ததும் நள்ளிரவில் இருவரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஷேர் ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவில் டிரைவர் மற்றும் 4 ஆண்கள் இருந்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் இது ஷேர் ஆட்டோ தான். வேலூர் செல்லும் வழியில் ஒவ்வொருவராக இறங்கி விடுவார்கள் என்றுகூறி அவர்களை ஆட்டோவில் ஏற்றினார். ஆட்டோ வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் சென்ற போது மருத்துவமனை செல்லும் பாதையில் சாலை பணிகள் நடப்பதாக கூறி வேறுபாதை வழியாக ஆட்டோ சென்றது. சிறிதுதூரம் சென்ற நிலையில் திடீரென ஆட்டோவில் இருந்த 4 நபர்களும் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கி விரட்டி விட்டு கத்திமுனையில் பெண் டாக்டரை  பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன், 2 பவுன் செயின், மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்து அதில் இருந்து ரூ.40 ஆயிரம் ரூபாய் எடுத்தனர். 

Continues below advertisement

இந்த சம்பவம்  குறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஆன்லைன் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு புகார் அளித்தார். அதன்பேரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (20), பாலா என்ற பரத் (19), மணி என்ற மணிகண்டன் (21), சந்தோஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சந்தோஷ் தவிர மற்ற 4 நபர்களையும் வேலூர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த சந்தோசை நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பெண் மருத்துவரின் செல்போன், 2 பவுன் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 17 வயது சிறுவன் உள்பட 5 நபர்களையும் காவல்துறையினர் வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி கலைபொன்னி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பார்த்திபன், பரத், மணிகண்டன் ஆகிய 3 நபர்களையும் வேனில் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் சென்னை கெலீஸ் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். மேலும் கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவத்துக்கு பிறகு வேலூர் மாநகரில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் காவல் துறையினர் தொடர் கண்காணிக்கவும், ரோந்து பணியை அதிகரிக்கவும் வேலூர் மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola