இயக்குநர் விக்ரமன் என்றவுடனேயே நமக்கு லாலாலா லல்ல லாலாலா என்று ரோசாப்பூ பாடல் மூளையில் புது வசந்தமாய் ரீங்காரிடும். இயக்குநர்கள் மணிவண்ணன், பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்து திரையில் இயக்குநரானவர் தான் விக்ரமன்.
இவருடைய திரைப்படங்கள் இனிமையான பாடல்களுக்காகவும் குடும்பப் பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காகவும் அறியப்படுகின்றன. அப்படிப்பட்ட இயக்குநர், மணிவண்ணனுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவருடைய பேட்டியிலிருந்து..
மணிவண்ணன் சாரிடம் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தேன்.
குவா குவா வாத்துகள், நூறாவது நாள் என பல படங்களில் நான் மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறேன். அவர் உண்மையிலேயே இந்தியா போற்றும் இயக்குநராக இருந்திருக்க வேண்டியவர். ஒரே நாளில் அசால்ட்டாக 7, 8 படங்களை சூட் செய்வார். எனக்கு பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும். குறிப்பா நூறாவது நாள் திரைப்படத்தை வெறும் 18 நாட்களில் எடுத்து முடித்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு ஷாட்டும், லொக்கேஷனும் அவ்வளவு கிளாசிக்கா இருக்கும். 5 பாடல்கள் நிறைய கேரக்டர்ஸ், லொக்கேஷன் என வெரைட்டி காட்டியிருப்பார். அவர் ஒரு நல்ல நடிகரும் கூட. ஸ்பாட்டில் அவ்வளவு அழகாக நடித்துக் காட்டுவார். அசத்தலாக இருக்கும். அதுபோல் டயலாக்ஸ்ல அவரை அடிச்சிக்கவே முடியாது. நான் எல்லாம் யோசிச்சி யோசிச்சு டயலாக் எழுதுவேன். அவர் அப்படியல்ல. ஒரு சிகரெட் முடியறதுக்குள்ள பிரமாதமான டயலாக் சொல்வார்.
அதேபோல் எந்த ஷாட் எப்படி எடுக்கணும். எதுக்கு க்ளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட், ட்ராலி, க்ரேன் என்றெல்லாம் மைண்ட் கால்குலேஷன்ல தான் வச்சிருப்பார். நான் சீன் பை சீன் எழுதி வச்சு அதை எடுப்பேன். அவர் ஆன் தி ஸ்பாட் முடிவு செய்வார். அந்த மைண்ட் கேல்குலேஷன் பிரம்மிப்பை தரும்.
இப்போதுதான் எடிட்டிங் செய்ய ஏவிட் போன்ற இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அப்போது மினிமம் டெக்னாலஜி வச்சிக்கிட்டு அவர் அதகளப்படுத்துவார். இது, அது என்பார். வெட்டி ஒட்டிப் பார்த்தால் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். மனசுக்குள்ள எடிட் செய்து அதை அப்புறம் எடிட்டரை செய்ய வைப்பார்.
அப்பேற்பட்ட கலைஞர் நான் எடுத்த சூரிய வம்சம், பிரியமான தோழி படங்களில் நடித்தார். என்னை ஸ்பாட்டில் சார் என அழைப்பார். நான் சார் நான் உங்க அசிஸ்டன்ட், என்னை மணின்னு கூப்பிடுங்க இல்ல விக்ரமன்னு கூப்பிடுங்க என்பேன். அதெல்லாம் இல்லைப்பா நான் மதித்தால் தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்பார். அவர் அப்போதெல்லாம் பீக்கில் இருந்தார். உள்ளத்தை அள்ளித்தா வெற்றியால் அவர் இல்லாத படமே இல்லை என்றளவில் இருந்தார். இருந்தாலும் எனக்காக இரண்டு படங்கள் செய்தார். இரண்டிலும் மாஸ் காட்டியிருப்பார். எப்போது அவரது ஸ்டைலில் நடிப்பவர். எனக்காக என் படங்களில் என் பாணியில் நடித்துக் கொடுத்தார். அவர் கிட்ட உதவி இயக்குநராகப் பணியாற்றதிலும் சரி அவரை வைத்து படம் எடுத்ததிலும் சரி எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் உண்டு.
இவ்வாறு விக்ரமன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.