ராஜஸ்தான் மாநிலத்தில் தௌசா மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.


இதுகுறித்து  தௌசா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லால் சந்த் கயல் கூறுகையில், மருத்துவர் அர்ச்சனா ஷர்மா, தனது கணவருடன் இணைந்து நடத்தி வந்த மருத்துவமனைக்கு மேலே உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தார்.


முன்னதாக, செவ்வாய்கிழமையன்று ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் இறந்துள்ளார். இதனால், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் ஷர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, கொலை தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவத்தின் போது ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொண்ட அர்ச்சனா, ‘என் மரணம் நான் குற்றாவாளி இல்லை’என்பதை கூறும் என்றும் எழுதி வைத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்






இந்த வழக்கில் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவ சங்கங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்திய மருத்துவ சங்கத்தின் ராஜஸ்தான் பிரிவு புதன்கிழமை காலை 6 மணி முதல் மாநிலத்தில் மருத்துவ சேவைகளை 24 மணி நேரன் நிறுத்த அனைத்து மருத்துவர்களுக்கும் அழைப்பு விடுத்தது.


 


டெல்லி ஜந்தர் மந்தரில் வியாழன் மாலை 6.30 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக இந்திய குடியுரிமை டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, நிபுணர் குழுவின் விசாரணையின்றி இதுபோன்ற வழக்குகளில் மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட பிழை என மருத்துவர் மீது குற்றம் சாட்ட முடியாது என்று மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.