சென்னையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 சவரன் நகை திருட்டு

சென்னை கோயம்பேடு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி (50). வரலட்சுமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில், தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது சீட் பிடிப்பதற்காக பெண்மணி ஒருவர் அவருக்கு உதவியதாக தெரிகிறது. 

இதனைத் தொடர்ந்து பேருந்தில் அவர் பயணித்துள்ளார். வரலட்சுமி தனது வீட்டிற்கு சென்று, தனது உடமைகளை பரிசோதித்த போது, தனது பையில் இருந்த மற்றொரு சிறிய பை காணாமல் போனதை பார்த்து உள்ளார். அந்த சிறிய பையில் இருந்த 5 சவரன் நகையும் காணாமல் போனதை பார்த்து, வரலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். 

கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் 

உடனடியாக வரலட்சுமி இதுகுறித்து முதலில் காஞ்சிபுரத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் நகை காணாமல் போனது குறித்து வரலட்சுமி புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு கிராமத்தின், ஊராட்சி மன்ற தலைவர் பாரதி (51) என்பவரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். ஊராட்சி மன்ற தலைவரான பாரதி திமுக ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். காவல்துறையினர் பாரதியிடம் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 

"தலைவரான பிறகும் திருடாமல் இருக்க முடியவில்லை"

காவல்துறையில் கைதான பாரதி கொடுத்த வாக்குமூலத்தில், திருப்பத்தூரில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகளில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். பாரதி ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல இடங்களில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து திசை திருப்பி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பேருந்தில் ஏறியவுடன் சாதாரணமாக குழந்தைகள் உள்ளிட்டவர்களுடன் பேச்சு கொடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பாரதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பேருந்தில் திருடும் பணத்தை விற்று சொந்த ஊரில் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டி உள்ளார் என காவல்துறையின தெரிவித்தனர்.

பாரதி ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பிறகும் திருட்டு தொழிலை விட்டுவிட படி உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் தன்னால் திருட்டுப் பழக்கத்தை விட முடியவில்லை என பாரதி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருடும்போது தனக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைப்பதாகவும் அதனால திருட்டுத் தொழிலில் பாரதி ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் திருட்டு தொழிலுக்கு செல்லும் போது "இனி திருடவே கூடாது" என ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன். ஆனால் திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் திருடி விடுவேன் என் சபதம் தோற்றுவிடும் என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது