தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ‘தமிழ்நாடு வளர்கிறது‘(TN Rising) என்ற பயணத்தின் கீழ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு கடந்த மாதம் 30-ம் தேதி புறப்பட்டுச் சென்றார். அதன்பின் இங்கிலாந்திற்கு சென்ற அவர், அங்கும் முதலீடுகளை ஈர்த்த பின், இன்று சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை வரவேற்று வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், இந்த பயணத்தில் தான் அதிக முதலீடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
“வெற்றிப் பயணத்தால் மனநிறைவு ஏற்பட்டுள்ளது“
வெளிநாட்டு பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து மன நிறைவுடன் திரும்பி இருப்பதாகவும், வெற்றிப்பயணத்தால் மனநிறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து நிறுவனங்கள் முதலீடுகளை செய்துள்ளதாகவும், இதுவரை சென்ற பயணங்களிலேயே முத்தாய்ப்பான பயணம் இதுதான் எனவும் முதலமைச்சர் கூறினார். மேலும், பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்கான தனது வெற்றிப் பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் புலம்பி வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
“அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே.?“
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும்போது, இப்படி அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே.. விட்டுடுங்க...“ என்று கூறினார்.
முதல்வர் பயணத்தில் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு.?
தமிழ்நாட்டிற்கு, வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அவரது இந்த ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின்போது, மொத்தம் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 15,516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
அதில், ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் 7,020 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, அதன் மூலமாக 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் 7 நிறுவனங்களில் 8,496 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, அதன் மூலம் 2,293 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.