திருவண்ணாமலை அடுத்த சொர கொளத்தூர் காப்புக்காட்டில்   புள்ளிமான், காட்டுப்பன்றி மற்றும் முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றது. இந்த காப்பு காடுகளில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் அடிக்கடி வன விலங்குகளை வேட்டையாடுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை தடுக்கும் விதமாக தினந்தோறும் இரவு நேரங்களில் வனத்துறையினர் காப்புக்காடு பகுதிகளில் ரோந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் திருவண்ணாமலை அடுத்த சொர கொளத்தூர் காப்புக்காடு பகுதியில் நேற்று இரவு 2 மணி அளவில் வழக்கம் போல் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனவர் சிவக்குமார், வனகாப்பாளர் பாலாஜி மற்றும் வனக்காப்பாளர் சுல்தான் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற பொழுது வனத்துறை அதிகாரிகள் அவர்களை துரத்திப் பிடித்து 2 பேரை கைது செய்தனர். மேலும் இரண்டு நபர்கள் அங்கு இருத்து தப்பி ஓடி உள்ளனர்.



இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொண்டம் காரியங்கள் கிராமத்தைச் சேர்ந்த சுமன் (31), கானலா பாடி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (18) ஆகிய இருவர் என தெரியவந்தது. மேலும் இருவர் தப்பி ஓடியவர் சூர்யா மற்றும் ரகுமான் ஆகிய நான்கு நபர்களும் இணைந்து. இவர்கள் வாரம்தோறும் சனிக்கிழமை இரவு நேரங்களில் மான், காட்டுப்பன்றி, முயல் போன்றவற்றை வேட்டையாடி  ஞாயிற்றுக்கிழமைகளில்  கறி விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வன சட்டத்தின்படி இருவரையும் கைது செய்து வனத்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களிடம் மான் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, நெத்தி பேட்டரி, ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய சூர்யா மற்றும் ரகுமானை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.



அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜ், தி.மு.க., கிளை செயலாளர். இவரது நிலத்தில் மான்கொம்பு புதைத்து வைத்துள்ளதாக, செங்கம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது நிலத்தில்,  சோதனை செய்ததில், அனுமதியில்லாத ஒரு நாட்டு துப்பாக்கி, தலையுடன் கூடிய இரட்டை மான் கொம்பு ஆகியவற்றை புதைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரது நிலத்தில் வேலை செய்யும் முனுசாமி, வயது (62), என்பவர் மீது மான் கொம்பு வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.