Jallikattu 2022: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி : தமிழ்நாடு அரசு

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கபடும் என்றும்,போட்டியில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

அதேபோல், நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் நடத்தப்பட்டுவரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மக்கள் பெருமளவில் மகிழ்ச்சியோடு பங்குபெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடுபிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பார்வையாளர்களாக பங்கேற்கும் நிகழ்ச்சியாகும். எனவே கொரோனா பரவலைகருத்தில்கொண்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

1) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் பெரும் பங்கு வகிப்பதால், ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் வருவது வழக்கம். இதனை கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT-PCR Test) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அடையாள அட் இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

2) காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு. நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.

3) ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

4) எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

5) ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும் அடையாள அட்டை இல்லாத வீரர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

6) ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT-PCR Test) என்பதற்கான சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

7) தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள். திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப (Total capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT-PCR Test) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

8) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT-PCR Test) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

9) அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

10) வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.

11) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள், 2017, அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola