திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், இந்த பள்ளிக்கு சேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார புறங்களில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். இந்த நிலையில், சேவூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் பூபதி என்பவர் அப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
அந்த மாணவனை சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆங்கில ஆசிரியர் திலீப் குமார், இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன் இருவரும் இணைந்து பல்வேறு காரணங்களை சொல்லியும், சாதிபாகுபாடு பார்த்து மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அடிபட்ட மாணவன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மாணவனை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்களை அழைத்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ், ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மாணவனின் பெற்றோரிடம் நடந்தது என்னவென்று விசாரணை நடத்தி பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் முற்றுகையிட்ட நபர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் மாணவனின் பெற்றோர் தன்னுடைய மகனை சாதி பாகுபாடு காரணமாக 2 ஆசிரியர்கள் தாக்கியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் குமார் வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு பள்ளி மாணவர்களிடமும் புகார் பெட்டி மூலம் அந்தந்த ஆசிரியர்களின் செயல்பாடு குறித்து புகார் அளிக்கலாம் என புகார் பெட்டி வைத்தனர். பின்னர் புகார் பெட்டியில் மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக எழுதி புகார் பெட்டியில் செலுத்தினர். பின்னர் புகார் பெட்டிகளை பெற்றுக்கொண்ட கல்வி அலுவலர்கள் மாணவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும் இந்த பதட்டமான சூழ்நிலையால் பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தினார், இந்த விசாரணையில் ஆங்கில ஆசிரியர் திலீப் குமார், இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன் ஆகிய இருவரும் பள்ளிமாணவர்களை சாதி பாகுப்பாடு காரணமாக திட்டுவது, அடிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது தெரியவந்தது. அதனையடுத்து இரண்டு அரசு ஆசிரியர்களைம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே சாதி பாகுபாடு காண்பித்து பள்ளி மாணவர்களை தாக்கிய சம்பவம் பெற்றோர்கள் இடத்திலும் பொதுமக்களிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.