தமிழ்நாடு ஒரு புண்ணியபூமி என்றும் மாநிலத்திற்கு வரும்போது தனக்கு புத்துணர்வு கிடைப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் நட்டா இன்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த இரண்டு நாள்களாக, பல்வேறு தரப்பினரிடமும் பா.ஜ.க. நிர்வாகிகளிடமும் பேசியதிலிருந்து பா.ஜ.க.வின் ஆதரவு பெருகி இருப்பதை பார்க்கிறேன். பிரதமர் மோடியின் வளர்ச்சி கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பிற கட்சி தொண்டர்கள் ஆகியோர் பெரிய எண்ணிக்கையில் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.
மோடியின் இதயத்தில் தமிழ்நாட்டிற்கு என தனித்த இடம் இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து உதவி பெரும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. கூட்டாட்சியில் பிரதமர் மோடிக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், கூட்டாட்சி துத்துவத்தில் நம்பிக்கை கொள்ளாமல் தி.மு.க. அரசு வீணாக அரசியல் செய்து வருகிறது. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அதிகபட்ச நிதியை ஒதுக்கப்பட்டுள்ளது.
மோடியின் ஆட்சியில் சிறப்பான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிந்த அளவுக்கு விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது. தமிழ்நாட்டில் மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது. மற்றவர்களை குறை கூறும் அரசியல் செய்கிறது.
மின் கட்டணம், சொத்து வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. யார் கட்டணத்தை உயர்த்துகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு படித்த தலைவர்கள் கிடைத்திருக்க வேண்டும். எது மாநில பட்டியலில் வரும்? எது மத்திய பட்டியலில் வரும்? எது பொது பட்டியலில் வரும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இது நியாயம் அல்ல. எங்களுக்கு வளர்ச்சியில் நம்பிக்கை இருக்கிறது. பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்புநிலை மக்களை உயர்த்துவதில் மோடி நம்பிக்கை கொண்டுள்ளார்.
வாரிசு அரசியல், பண விநியோகம், கட்டப்பஞ்சாயத்து அரசியல் செய்கிறது தி.மு.க. அவர்கள் ஊழல் செய்து வருகின்றனர். அதை சட்டப்பூர்வமாக்கி வருகின்றனர். தமிழ்நாடு மக்களுக்கு மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அமைய வேண்டும் என விரும்புகின்றனர்.
எய்ம்ஸ் தொடர்பாக நான் பேசியது குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை பதில் அளிப்பார். நான் ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன். தயவு செய்து படித்த தலைவர்களை வைத்து கொள்ளுங்கள். முதலீடுக்கு முன்பான ஆய்வு என்றால் என்ன? எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது? என்பதை புரிந்து கொள்ளும் தலைவர்கள் வேண்டும். எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்" என்றார்.