திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி டிஎஸ்பி ஆபீசில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.




தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள தலையால்நடந்தான்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த காளிரத்தினம் மகள் மகாராணி (25). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த செல்லப்பா மகன் இசக்கிமுத்து என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமண ஆசைவார்த்தை கூறிய இசக்கிமுத்து, அவருடன் நெருங்கி பழகினார். இதில் மகாராணி கர்ப்பமடைந்தார். இதனைத்தொடர்ந்து அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இசக்கிமுத்துவிடம் கூறவே அவர், கருவை கலைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாத்திரை கொடுத்ததாக தெரிகிறது. இதில் மகாராணியின் கரு கலைந்தது.





இதனைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் நெருங்கி பழகியதால் மகாராணி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து மகாராணி, இசக்கிமுத்துவிடம் கூறிய போது அவர், வழக்கம்போல் கர்ப்பத்தை கலைத்து விடு என்று கூறியதாக தெரிகிறது. மேலும் இசக்கிமுத்துவின் தாய் இசக்கியம்மாள், தந்தை செல்லப்பா, அவரது சகோதரி இசக்கியம்மாள், அத்தை துர்க்கையம்மாள் ஆகியோர் சேர்ந்து கருவை கலைத்து விடு அல்லது 100 பவுன் நகையுடன் வந்தால் உன்னை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியதாக தெரிகிறது.





இதுகுறித்து மகாராணி கடந்த 24ம்தேதி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இசக்கிமுத்து உள்ளிட்ட 5 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகாராணி மற்றும் அவரது தாய் ஆகியோர் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி உதயசூரியன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.




இதுகுறித்து பாதிக்கப்பட்ட மகாராணி கூறுகையில், பெரியப்பா வீட்டுக்கு செல்லும்போது செல் போன் பேசிட்டு தாரேன் என இசக்கிமுத்து கேட்டதால் செல்போனை கொடுத்ததாகவும் தொடர்ந்து இசக்கிமுத்து போன் செய்து தொல்லை கொடுத்து வந்தார். தன்னை காதலிக்கவில்லை என்றால் வீட்டில் உள்ளவர்களை கொலை செய்வதாக மிரட்டினார். தன்னை திருமணம் செய்வதாக கூறி பழகி வந்ததால் கர்ப்பம் அடைந்தேன். ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் இசக்கிமுத்து குடும்பத்தினர் என்னை மிரட்டி வருவதாகவும் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்


இதனைத்தொடர்ந்து தாய், மகள் இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.