சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கோபி மீது ஆய்வு மாணவியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இன்று புகார் அளித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் கோபி. இவர் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் வேதியல் துறையில் ஆய்வு மாணவி ஒருவரை கோபி விடுமுறை நாளான நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ப்ராஜெக்ட் நோட் கையெழுத்து பெற அழைத்துள்ளார். அதன்படி பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் வீட்டிற்கு சென்ற ஆய்வு மானவிக்கு கோபி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.



உடனடியாக வீட்டிற்கு தப்பி சென்ற மாணவி வீட்டில் இருந்த உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். அதன்பின் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் வீட்டிற்குச் சென்ற மாணவியின் உறவினர்கள் பதிவாளர் மற்றும் வேதியியல் துறை பேராசிரியராக உள்ள கோபி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த பதிவாளர் (பொறுப்பு) கோபி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி, கருப்பூர் காவல் நிலையத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி மீது நேற்று மதியம் புகார் அளித்தார். அதேபோல அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி, கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனிடையை ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களை சீண்டுதல் (354 A) மற்றும் தொடர்ந்து தொல்லை தருதல் (354 D) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பதிவாளர் கோபி மீது வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்யப்பட்டார். பின்னர் பதிவாளர் கோபி கருப்பூர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் சூரமங்கலம் உதவி கமிஷன் நாகராஜன் விசாரணை செய்தார்.


விசாரணையில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி விடுமுறை நாளில் மாணவியை வீட்டிற்கு தனியாக அழைத்தது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பதிவாளர் கோபி சேலம் அரசு மோகன் குமார் மங்கலம் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கோபி பதிவாளர் மற்றும் பேராசிரியர் பதவியில் இருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதனை ஏபிபி செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக கோபி கைது செய்யப்பட்டதின் அடிப்படையில் அவர் வகித்து வந்த பதிவாளர் (பொறுப்பு) மற்றும் பேராசிரியர் பதவியில் இருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்த விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.