சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடத்திய சோதனையில் 10.13 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல். போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement


போதைப் பொருள் கடத்தல்


சமீப காலமாக நாடு முழுக்க போதை பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், தொடர்ந்து போதை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.


அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


ரகசிய தகவல்


இந்தநிலையில், சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.50.65 கோடி மதிப்புள்ள 10.13 கிலோ மெத்தாம்ப்டமைன் என்ற போதைப் பொருளைப் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மூன்று நபர்கள் போதைப் பொருட்களை தமிழகத்தின் தென் கடலோரப் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த விருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், 29.08.2024, 30.08.2024 ஆகிய தேதிகளில் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.


சிக்கிய கும்பல்..


சென்னை புறநகர் பகுதியான பொத்தேரி அருகே சந்தேகத்திற்கு இடமான வாகனத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் . வாகனத்தை சோதனையிட்டபோது, காரின் பின் இருக்கைக்கு அடியில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரகசிய பகுதியில், 10.13 கிலோ மெத்தாம்ப்டமைன் போதைப் பொருள் அடங்கிய 10 பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.


மூன்று பேர் கைது


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, போதைப் பொருட்கள் பதித்து வைக்கும் வைக்கும் இடம் குறித்து அதிகாரிகள் தகவல்களை பெற்றனர்.‌ தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் தேடுதலின் போது மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் விற்பனை தொகையான ரூ.1.30 கோடி ரொக்கமாகவும், குற்றவாளிகள் பயன்படுத்திய மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


மெத்தம்பெட்டமைன் என்றால் என்ன ?


மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) என்பது ஐஸ் என்னும் போதை பொருளாக பரவலாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் இந்த போதை பொருள் பார்ப்பதற்கே, உறைந்த வெள்ளை நிற ஐஸ்கட்டி போல் காட்சியளிக்கும். இந்த போதை பொருள் முழுமையாக 100% செயற்கை முறையில் தயாரிக்கப்படும் போதைப் பொருளாக உள்ளது.


செயற்கை முறையில் தயாரிக்கப்படும் போதை பொருள் என்பதால் இதன் வீரியமும், அதிகளவு உள்ளது. ஒரு முறை மட்டுமே இந்த போதை பொருளை பயன்படுத்தினால் போதும், அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர் அதற்கு எளிதாக அடிமையாகி விடுவார். இது அதிக அளவு எடுத்துக் கொண்டால் கோமா நிலைக்கு சென்று மரணத்தையும் ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இது எந்தவித சுவையும் இருக்காது என்பதால் , வேறு பொருட்களில் சேர்த்து கடத்தி சென்றார் இதை கண்டுபிடிப்பதும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.