தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள தமிழர்களை இன்று அவர் சந்தித்தார். அங்கு வசிக்கும் புலம்பெயர் தமிழர்களை சந்தித்தார். 


அமெரிக்காவின் ஈர்ப்புக்கு உரிய மாநிலம் தமிழ்நாடு:


இந்த சந்திப்பின்போது அவர் பேசியதாவது, அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு அமெரிக்காவிற்கு ஈர்ப்புள்ளதாக உள்ளது. இந்தியாவிலே 2வது பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் தமிழ்நாட்டின் அடையாளம்.


உழைப்பு, தன்னம்பிக்கையால் இந்திய வம்சாவளியினர் உயர்ந்துள்ளனர். அமெரிக்க முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இந்திய வம்சாவளியினர் வலியுறுத்த வேண்டும். பல்வேறு மொழி பேசும் இந்திய மக்கள் அமெரிககாவில் பரந்து விரிந்துள்ளனர்.


அதிகளவு முதலீடுகள்:


தொழில் முதலீடுகளை ஈர்க்க நான் வந்திருந்தாலும் என் இனிய இந்திய சொந்தங்களின் முகங்களை பார்க்கவும் வந்திருக்கிறேன். ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் மிக முக்கியமான நாடுகள். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா உள்ளது என்றால் இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.

அமெரிக்கா – இந்தியா இடையேயான நட்பு பல்லாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தகம், பொருளாதாரம், கணினி ஆகிய துறைகளில் நல்லுறவு தொடர்கிறது. அமெரிக்காவுக்கு அதிகளவில் குடிபெயர்ந்த மக்கள் எண்ணிக்கை 2வது இடத்தில் இந்தியா உள்ளது. ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு இந்தியா – அமெரிக்கா உறவு மிக மிக முக்கியம். புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளவு முதலீடுகள் செய்து வருகின்றன.


இவ்வாறு அவர் பேசினார். 


அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பல்வேறு முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை நேரில் சந்தித்து ரூபாய் 900 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டுள்ளார். நாளை அவர் சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். சிகாகோவிலும் பல்வேறு முக்கிய தொழில் நிறுவன அதிகாரிகளை சந்திக்கிறார். 


மொத்தம் 17 நாட்கள் சுற்றுப்பயணமாக  அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட பலரும் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.