நாகை மாவட்டம் வெளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். வேன் டிரைவரான இவர், தனது வேனில் பல்வேறு பகுதிகளுக்கு மீன் ஏற்றிச் செல்வது வழக்கம். நாகையிலிருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றிச் சென்ற ராஜசேகர், அங்கு அவற்றை இறக்கிவிட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். ‛கடலின் அக்கரை போனோரே... காணா பொன் தேடி போனோரே... போய் வரும் போதென்ன கொண்டு வரும்... கை நிறைய போய் வரும் போதென்ன கொண்டு வரும்...?’ என, மலையாளப் பாடலோடு வேனில் மகிழ்ச்சியாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி தேசிய நெஞ்சாலையில் நான்கு பேர் உதவி கேட்டு மறித்துள்ளளனர். 




‛உதவினு யார் வந்தாலும்... நான் கைவிடுவதில்லை...’ என நால்வருக்கும் நம்பிக்கை தந்து வேனில் ஏற்றினார் ராஜசேகர். ‛என்ன கொண்டு வரும்... என்ன கொண்டு வரும்...’ என்று பாடல் ஒருபுறம் பாடிக்கொண்டிருக்க, பாடல் வரிகளை உள்வாங்கிய அந்த நால்வரும், ‛என்ன கொண்டு வர...’ என ராஜசேகரிடம் கேட்டுள்ளனர். ‛கேரளாவில் மீன் இறக்கிவிட்டு, தாராள பணத்துடன் ராஜசேகர் சென்று கொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். தொழில் எப்படி போகுது... நல்ல வருமானமா... கொரோனா எவ்வளவு கஷ்டப்படுத்துச்சுனு நிறைய அவரிடம் பேசியிருக்கிறார்கள். ராஜசேகரும், தன் சிரமங்களுக்கு குரல் கொடுக்க இத்தனை பேரா என்கிற ரீதியில் தன் வியாபார விசயங்களை பகிர்ந்திருக்கிறார். எல்லாம் முடிந்த பின் புதர் அருகே வாகனத்தை நிறுத்தச் செய்து, ராஜசேகரை நயப்புடைத்தது நால்வர் அணி. காயத்துடன் துடித்தவரிடத்தில் கத்தியை காட்டி அவரிடம் இருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனது அந்த மர்ம கும்பல். 




ரத்த காயங்களுடன் மெயின் ரோட்டுக்கு வந்த ராஜசேகரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் நடந்த விசாரணையில், ‛லிப்ட்’ கேட்டு வந்தது வடமதுரை மோர்பட்டியைச் சேர்ந்த தினேஷ்கண்ணன்(24), ராஜேஷ்கண்ணன்(27), செங்குளத்துப்பட்டி சாமிக்கண்ணு என்கிற சூசை(33), கொல்லப்பட்டியைச் சேர்ந்த ராம்குமார்(35) என்பது தெரியவந்தது. அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து, வழிப்பறை செய்வது தான் அவர்களது முழு நேர தொழிலாக இருந்திருக்கிறது. அதில் சமீபத்திய வரவு தான் ராஜசேகர். படுகாயமடைந்த ராஜசேகருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. போய் வரும் போதென்ன கொண்டு வரும்....? அடையாளம் தெரியாதவர்கள் வழிமறித்தால், கொண்டு வந்த அனைத்தையும் இழந்து வரும்! என்பது தான் இந்த குற்றச் செய்தி சொல்ல வரும் சேதி. பணத்தோடு, அதுவும் தனிமையில் ஊர் திரும்புவோர்... நெடுஞ்சாலையில் வரும் போது கவனமாக வாருங்கள். இல்லையேல் பணம் மட்டுமின்றி வேறு சில இழப்புகளும் நம்மை தேடி வரலாம் என எச்சரிக்கிறது காவல் துறை.