இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பல்வேறு நாடுகளில் இது பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 


இந்நிலையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகியின் நெருங்கிய நண்பர்களின் மொபைல் போனும் ஹேக் செய்யப்பட்டு வேவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து த வையர் நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹடிஸ் செங்கிஸ் மற்றும் ஹனான் எல்டர் என்ற இரண்டு பெண்களின் மொபைல் போன் கிட்டதட்ட பல நாட்களாக வேவு பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் கசோகியின் இறப்பிற்கு பின்பு அந்த வழக்கை விசாரிக்கும் இரண்டு துருக்கி அதிகாரிகளின் மொபைல் போனும் இந்த பெகசஸ் வைரஸ் அட்டாக்கில் சிக்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 




ஜமால் கசோகியின் மனைவியான ஹனான் எல்டருக்கு 2017ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் மற்றும் 2018 ஏப்ரல் மாதம் ஆகிய இருமுறை இந்த வைரஸ் தொடர்பான லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. அவை அவருடைய சகோதரியிடம் வந்த குறுஞ்செய்தி போல் அனுப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 2018ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் ஹடிஸ் செங்கிஸ் என்ற ஆராய்ச்சி படிப்பில் இருக்கும் பெண் உடன் கசோகி காதல் வயப்பட்டுள்ளார். அவருடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்காக சவுதி அரேபியாவின் தூதரகத்திற்கு சென்று ஒரு விவகாரத்து சான்றிதழ் பெறுவது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது அவர் முறையான முன்பதிவு செய்யாமல் வந்ததால் அக்டோபர் 2ஆம் தேதி வருமாறு அவருக்கு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அக்டோபர் 2ஆம் தேதி வந்த கசோகி திரும்பி வெளியே வரவே இல்லை. அவர் இறந்து விட்டத்தை துருக்கி அரசு ஒரு நாள் கழித்து வெளியிட்டது. எனினும் சவுதி அரேபிய அரசு 18 நாட்கள் வரை அதை ஒப்புக் கொள்ளவில்லை. 


மேலும் தற்போது வரை கசோகியின் உடல் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு அக்டோபர் 6ஆம் தேதி செங்கிஸின் மொபைல் போன் பெகசஸ் வைரஸ் தாக்கலுக்கு உள்ளாகியுள்ளது. அதன்பின்னர் கசோகிக்கு செங்கிஸை அறிமுகம் செய்து வைத்த துருக்கி பத்திரிகையாளர் டுரன் கிஸ்லாக்கியின் மொபைல் போனும் இந்த பெகசஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கசோகியின் வழக்கை விசாரிக்கும் இர்ஃபான் ஃபிடான் என்ற அதிகாரியின் மொபைல் போனும் பெகசஸ் வைரஸ் தாக்குதலால் வேவு பார்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 




மேலும் கசோகியின் மரணத்திற்கு சவுதி அரேபிய அரசு திட்டமிட்டது செய்த செயல் என்று அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக குற்றம் சாட்டின. எனினும் இதை தற்போது வரை சவுதி அரேபிய அரசு மறுத்து வருகிறது. ஏற்கெனவே கசோகியின் மரணத்திற்கு பிறகு அவருடைய நெருங்கிய நண்பரான வாடா கன்ஹார், “என்னுடைய மொபைல் போன் அல்லது ஹடிஸ் உடைய மொபைல் போன் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று ஹேக் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏன்னெறால் நாங்கள் அவருடன் மட்டும் நடத்திய தனிப்பட்ட உரையாடல்களின் தகவல் சில வெளியே கசிந்துள்ளன” என்று புகார் எழுப்பியிருந்தார். அவர் கூறியது தற்போது இந்த பெகசஸ் ஸ்பைவேர் ஆய்வில் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பெகசஸ் ஸ்பைவேர்.. தெரிந்துகொள்ளவேண்டிய டாப் 10 தகவல்கள்!