கொலை, கொள்ளை தென்மாவட்டத்திற்கு புதிதல்ல. அரிவாள், கத்தி என்றதோடு இருந்த வரை அது வழக்கமான ஒன்றாக இருந்தது. துப்பாக்கியால் சுட்டுக் கொலை எனும் போது, அது அப்டேட் ஆகியிருக்கிறது என்பது தான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. இந்த அப்டேட், மகிழும் விசயமல்ல; வழக்கத்தை விட அதிகம் வருந்தவேண்டிய விசயம்.  திண்டுக்கல் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அதிர்ச்சி அல்ல... பேரதிர்ச்சி! 



குற்றவாளி பிரகாஷ்


வடமாநிலத்தைச் சேர்ந்தவர் இதில் ஈடுபடவில்லை. வடமாநிலத்திலிருந்த வாங்கி வரவும் இல்லை. மாறாக, இங்கேயே, அவர்களே தயார் செய்து, அதை அமல்படுத்தியிருக்கிறார்கள். இத்தனைக்கும், அவர்கள் கையில் அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களும் இருந்திருக்கிறது. ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். 6 குண்டுகள் அவர் உடம்பில் துளைத்ததாக கூறப்படுகிறது. அவர்களின் நோக்கம், முழுக்க துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என்பதே!


அதனால் தான், ஆறு குண்டுகள் கொலையானவர் உடலின் சென்றிருக்கிறது. பிரச்சனை என்னவென்று பார்த்தால், அதைவிட மோசமாக உள்ளது. திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்தவர்.  ராக்கி (எ) ராக்கேஷ். இவரது தந்தை மாணிக்கம், திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி செட்டிக்குளத்தில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளார். இதனால் எழுந்த போட்டா போட்டி, பகையாக இருந்திருக்கிறது. ஜனவரி 2ம் தேதி நண்பர்களுடன் மீன்பிடி குளத்தில் காவலுக்கு இருந்துள்ளார் ராக்கி. அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான் சூர்யா, மரியபிரபு ஆகிய 4 பேர், ராக்கியை சுட்டுக் கொலை செய்து தப்பியோடினர். 



கொலையான ராக்கி


அவர்களின் நோக்கம், ராக்கியை கொலை செய்வது மட்டுமே, அதனால் தான் உடனிருந்த நண்பர்களை அவர்கள் சீண்டவில்லை. ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ராகேஷை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீசார், 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் பிடித்துவிட்டோம் என்கின்றனர். பிடித்துவிட்டோம் என்பதில் மகிழ்வதா, சம்பவம் நடந்துவிட்டது என்று நொந்து கொள்வதா?


சரி, அதன் பின், சம்பவ இடத்திற்கு வந்த தென்மண்டல ஐஜி அன்பு, ஆய்வுக்குப் பின் திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். கொலையாளிகள் பயன்படுத்தியது துப்பாக்கி அல்ல என்கிறார். ஆனால், கொலையானவர் உடலில் தோட்டாக்கள் உள்ளது. துப்பாக்கி என்கிற பெயரை தவிர்த்து, அதற்கு வேறு ஏதேதோ பெயர்களை கூற முயற்சிக்கிறார் ஐஜி. சில நேரம் நாட்டுத்துப்பாக்கி என கூற வருகிறார்; பின்னர் நாட்டு துப்.. கையில் செய்துள்ளனர் என மாற்றிவிடுகிறார். இதிலிருந்து ஒன்று புரிகிறது. துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை என்பதை போலீசார் பதிவு செய்ய முயற்சிப்பதாக அறிய முடிகிறது. 


 



கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை ஆய்வு செய்யும் தென் மண்டல ஐஜி அன்பு


சம்பவம் தான் முக்கியமே தவிர, சம்பவத்திற்கு எது காரணம் என்பது முக்கியமல்ல. திண்டுக்கல் மாதிரியான, பரபரப்பான நகரில், ஆயுத தயாரிப்பு நடக்கிறது, அந்த ஆயுதத்தாலேயே கொலை நடக்கிறது என்பதெல்லாம், உச்சகட்ட க்ரைம். எவ்வாறு இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் யார்? இதன் பின்னணியில் இருக்கும் கும்பல் யார்? இந்த கலாச்சாரத்தை எப்படி தடுப்பது? என பல கேள்விகளுக்கு விடை வேண்டும்; இது போன்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் குற்றப்பின்னணிக்கு தடை வேண்டும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண