திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்த மலை மீதுள்ள பெரியமலையூர் அடுத்த வலசு பகுதியை சேர்ந்தவர்கள் நல்லப்பிச்சன் மகன்கள் கருப்பையா (30), சிவக்குமார். கருப்பையாவிற்கு திருமணம் ஆகவில்லை. தம்பி சிவக்குமார், அஞ்சலை (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது அஞ்சலை 4 மாத கர்ப்பமாக இருந்தார்.
சிவக்குமார் புளி வியாபாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் வெளியூர் சென்றுவிட்டார். அஞ்சலை குழந்தையுடன் அதே பகுதியில் உள்ள தோட் டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விறகு வெட்ட வந்த கருப்பையா, அஞ்சலையை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு அஞ்சலை மறுத்தார். தொடர்ந்து கருப்பையா தொந்தரவு கொடுக்கவே, இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலை கருப்பையாவிடம் இருந்து தப்பிக்க மகளுடன் ஓட்டம் எடுத்துள்ளார். அஞ்சலை வீட்டிற்கு சென்றுவிட்டால் மாட்டிக்கொள்வோம் என பயந்துபோன கருப்பையா அரிவாளால் அஞ்சலையை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அருகில் மிக நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்த 2 வயது குழந்தையையும் ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொன்றார்.பின்னர் அதே இடத்தில் இருவரையும் தீவைத்து எரித்தார். அப்பகுதியில் இருந்து நீண்டநேரம் புகை வருவதை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில், கருப்பையா தனது தம்பியின் மனைவி, மகளை கொலை செய்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிந்து கருப்பையாவை கைது செய்தனர். இந்த சம்பவம் 5 அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்