வேடசந்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


திண்டுக்கல் மாவட்டம், மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பாரிச்சாமி. இவருக்கு திருமணமாகி பரிமளா என்ற மனைவியும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் மதுரை அருகே உள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் அபுதாபியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அடிக்கடி கோழிப்பண்ணைக்கு சென்று வந்துள்ளார். அப்போது ரமேசுக்கும் பாரிசாமியின் மனைவி பரிமளாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.




கள்ளக்காதல்


இதனை அறிந்த பாரிச்சாமி அவர்களை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் பழக்கத்தை கைவிடாததால், பாரிச்சாமி வேலையை விட்டுவிட்டு வேடசந்தூர் அருகே உள்ள பெரியபட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். மேலும் தனது குடும்பத்தினரையும் வேடசந்தூருக்கு அழைத்து வந்தார். இதுகுறித்து பரிமளா வெளிநாட்டில் இருந்த ரமேஷுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட வேண்டும் என்றும் பரிமளா ரமேஷிடம் கூறி கூறியுள்ளார். தான் வெளிநாட்டில் இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு செலவுக்கு பணம் கொடுத்து விடுவதாகும் ரமேஷ் கூறியுள்ளார்.


கொலை சம்பவம்


அதனைத்தொடர்ந்து பரிமளா மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் தருவதாக கூறி கூலிப்படையை ஏற்பாடு செய்தார். அதன்படி கடந்த 12ஆம் தேதி இரவு கோழிப்பண்ணைக்குள் புகுந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் கோழிப்பண்ணையில் மின்சாரத்தை துண்டித்து பாரிச்சாமியை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த பாரிச்சாமியை அவரது குடும்பத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.




கள்ளக்காதலன் உட்பட மூன்று பேர் கைது


அதில் பாரிச்சாமியின் மனைவி பரிமளா கூலிப்படையை வைத்து கணவரை கொல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பரிமளா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த பெரியையன் என்ற குமார் (36) மற்றும்  17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படையை ஏறி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.