சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இளையராஜா புகார் அளித்துள்ளார். சாமி தரிசனம் செய்ய சென்ற போது, கோவிலுக்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிதாகவும், அதை புகைப்படம் எடுக்க முயன்ற தன்னை தீட்சிதர்கள் தாக்கியதாகவும் வி.சி.க நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வி.சி.க நிர்வாகி அளித்த புகாரின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்?


சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா(40). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளராக உள்ளார். இவர் நேற்று இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது கோயிலில் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடியதாக தெரிகிறது. இதைப்பார்த்த இளையராஜா தனது செல்போனில் அதை படம் பிடித்து உள்ளார்.


அப்போது அங்கு வந்த தீட்சிதர்கள் சிலர் இளையராஜாவின் செல்போனை பிடுங்கிக் கொண்டு, அவரை திட்டி தாக்கி உள்ளனர். இதனால் காயமடைந்த இளையராஜா சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் நடந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இந்நிலையில் காயமடைந்த இளையராஜா கூறுகையில், நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றேன். அப்போது தீட்சிதர்கள் சிலர் அங்கு கிரிக்கெட் விளையாடினார்கள் கோயிலுக்குள் ஏன் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள் என கேட்டு அதை படம் எடுக்க வேண்டும் அப்போது பல தீட்சிதர்கள் என்னை தாக்கி என்னிடமிருந்து செல்போனையும் பறித்துக் கொண்டனர்.


இது எங்கள் கோயில் உங்களால் என்ன செய்ய முடியும் நீ எங்கு சென்றாலும் இங்குதான் வரவேண்டும் என கூறி அடித்தார்கள் எனவும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.