சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி நேறறு முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மொத்தம் 15 லட்சம் பேர் கண்டுகளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 பேர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.


பொதுமக்கள் ஆத்திரம்:


மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் நேரில் சென்று பார்ப்பதற்கு முறையான போக்குவரத்து வசதிகளும், திரும்பி வருவதற்கான போக்குவரத்து வசதிகளும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.


மேலும், மதிய வேளையில் கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை ஏற்பாடுகள் முறையாக செய்யப்படாத காரணத்தால் ஏராளமானோர் மயக்கம் அடைந்தனர். முறையான ஏற்பாடுகள் செய்து தரப்படாத காரணத்தால் பொதுமக்கள் பலரும் ஆத்திரம் அடைந்தனர். அரசின் அலட்சியமே மக்களின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அப்பா என்றால் சம்பாதிக்க மட்டும்தானா?


இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான்பாபு என்பவரின் மகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “  நான் சென்று பார்த்தபோது எனது அப்பாவை பீச்சில் உள்ள ப்ளாட்பாரமில் படுக்க வைக்கப்பட்டு இருந்தார். அங்கிருந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இங்கு வந்து சேர்த்தபோது மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர்.


அப்பா என்றாலே சப்போர்ட்தான். அது எந்த சப்போர்ட் என்று சொல்ல முடியுமா? ஒரு அப்பா என்றால் சம்பளம் மட்டும்தானா? அனைத்திற்கும்தானே. அவர் பேரன், பேத்திகளிடம் மிகவும் அன்பாக இருப்பார். அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அவரை கொடுக்க முடியுமா? எங்கப்பா மாதிரி இனி யாருக்கும் நடக்கக்கூடாது. எங்க குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.


ஆம்புலன்ஸ் செல்ல பாதை இல்லை:


மேலும், ஜான் பாபுவின் உறவினர் ஒருவர் கூறும்போது, தண்ணீர் பாட்டில் எங்கும் கிடைக்கவில்லை. ஒரு பாட்டில் வாங்கவே மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஒரு பாட்டில் ரூபாய் 60, 70 என்று விற்கிறார்கள். விற்பது கூட பிரச்சினை இல்லை. தண்ணீர் கிடைக்க வேண்டுமே?


இவரை மெயின் ரோட்டிற்கு அழைத்து வரவே மிகவும் தாமதம் ஆகிவிட்டது. 2.30 மணிக்கு இந்த நிகழ்வு நடந்தது. 3 மணி வரை ஆம்புலன்ஸ் வரவே இல்லை. 3 மணிக்கு கிளம்பிய ஆம்புலன்ஸ் 4 மணிக்குத்தான் வருது. ஏர்போர்ஸ் ஷோ எல்லாம் ஓகே. ஆம்புலன்ஸ் செல்வதற்கு ஒரு தனி வழி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால், எதுவுமே செய்யவில்லை. கடற்கரையின் தாங்கும் சக்தியே 3 லட்சம் வரைதான் இருந்தது. காணும் பொங்கலுக்கு வரும் ஆய்வு அறிக்கைப்படி சொல்கிறேன். 13 லட்சம் பேர் வரை வந்துள்ளனர். அப்போது, அதற்கு ஏற்றாற்போல செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.”


இவ்வாறு அவர் கூறினார்.


இந்த சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.