பாப்பாரப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் நகைக்கடை பூட்டை உடைத்து, வெள்ளி நகைகள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி நகைகள் மீட்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கடை தெருவில் பாலாஜி என்பவர் வெள்ளி நகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 7 தேதி இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். தொடர்ந்து அடுத்த நாள் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பொழுது உள்ளே சென்று பார்த்த போது வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாப்பாரபட்டி காவல் துறையினருக்கு தகவர் தெரிவித்துள்ளார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பார்த்தபோது வெள்ளி நகைக்கடையில் பூட்டை உடைத்து கடையில் இருந்த கொலுசு, மெட்டி, கைசெயின் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. அதனையடுத்து வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்களை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பாப்பாரபட்டி ஏரிக்கரை அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்தனர். அப்பொழுது இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் 2 பேரும் பாப்பாரபட்டி கடைவீதியில் உள்ள வெள்ளி நகை கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள மூக்கனூரை பகுதியை சேர்ந்த மாதேஷ்(19) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கல்கூடபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவா(20) ஆகிய இருவரும் பகல் நேரத்தில் பெயின்டடிங் வேலை செய்து வருவதும், அப்போது கடைகளில் முன்பு சிசிடிவி கேமரா இல்லாத கடைகளை தெரிந்து கொண்டு, இரவு நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. பாப்பாரப்பட்டியில் திருடிய வெள்ளி பொருட்களை சிவா, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சுமார் 5 இலட்சம் மதிப்பிலான 7 கிலோ வெள்ளி நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து, சிவா, மாதேஷ் இருவரையும் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட வெள்ளி நகைகளை நீதிமன்ற மூலம், உரிமையாளருக்கு திருப்பி வழங்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.