அரூரில் நள்ளிரவில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கிய மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சா பேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை, தில்லை நகர்  உள்ளிட்ட பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் டாட்டா ஏசி பிக் அப் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் மூலம் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் வைத்துள்ள கார், ஆட்டோ, பிக்கப் வாகனம் உள்ளிட்டவற்றை இரவு நேரங்களில் தங்களது வீட்டின் முன் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை இரும்பு கம்பி மற்றும் கற்களால் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

 

இந்நிலையில் அதிகாலையில் எழுந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த சம்பவம் தில்லை நகர், மேல்பாட்ஷாப்பேட்டை, கீழ்பாட்ஷாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் முழுவதுமாக நடைபெற்று உள்ளது தெரிய வந்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைக்கப்படும், இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.



 

இதுகுறித்து அரூர் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையிலான 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய காவல் துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் அரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அரூரை சுற்றியுள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சேலம் பிரதான சாலை, முருகன் கோயில் தெரு போன்ற இடங்களிலும் லாரிகள், கார் கண்ணாட்டி,  இருசக்கர வாகனம் மற்றும் வீடுகளின் கண்ணாடிகள் கூட உடைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் காவல் துறையினர் நகர் பகுதி முழுவதுமாக தினந்தோறும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அதேபோல் நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர் கார் கண்ணாடி உடைத்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.