தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்துக் கவுண்டர் என்பவருக்கு சண்முகம், சிவக்குமார், முருகேசன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் சண்முகம் என்பவருக்கு திருமணமாகி, மனைவி ஜெயா மற்றும் மகன் செல்லக்கண்ணுவுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 20 ஆண்களுக்கு முன் சண்முகம் இறந்துள்ளார். இதனையடுத்து சண்முகம் மகன் செல்லக்கண்ணு தங்களது விவசாய நிலத்தில் இரண்டடுக்கு மாடி வீடு கட்டி, செல்லக்கண்ணு, தனது தாய், மனைவி பூஜா மற்றும் சித்தப்பாக்களுடன் வசித்து வந்துள்ளார். மெக்கானிக் வேலை செய்து வரும் செல்லக்கண்ணுக்கு அதிகளவு குடிப்பழக்கம் இருந்துள்ளது.


கொலை செய்யப்பட்ட செல்லக்கண்ணு


 


இந்நிலையில் கடந்தாண்டு செல்லக்கண்ணு தனது நிலத்தை விற்ற பணத்தில், சித்தப்பா முருகேசனுக்கு ரூ.1.50 இலட்சம் கடனாக கொடுத்துள்ளார். இந்த கடனை, திருப்பி கேட்கும் போதெல்லாம், முருகேசன் 1000, 2000 என கொடுத்து வந்துள்ளார். இதனால் இவருக்கும் இவரது சித்தப்பா முருகேசன், சிவகுமார் உடன் சொத்து சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மதுபோதையில் தன்னுடைய சித்தப்பாக்களிடம்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மீண்டும் வந்து தகராறு செய்துள்ளார்.

 



 

அப்பொழுது தாய் மற்றும் சித்தாப்பாக்களை கடுமையான வார்த்தைகளால் திட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், சிவகுமார் இருவரும் ஒன்று சேர்ந்து, வீட்டில் இருந்த செல்லக்கண்ணுவை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்பொழுது வீட்டில் இருந்த பெரிய இரும்பு ராடால் முருகேசன் மற்றும் சிவக்குமார் இருவரும் செல்லக்கண்ணுவை, மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள்ளே சுருண்டு விழுந்த செல்லக்கண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து நீண்ட நேரமாக வீட்டில் அதிக அளவில் சத்தம் வந்ததால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து, அரூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



 

தொடர்ந்து சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த அரூர் காவல் துறையினர், செல்லகண்ணு, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரும்பு ராடால் அண்ணன் மகனை அடித்து கொலை செய்த முருகேசன், சிவகுமார் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அண்ணன் மகனை, சித்தப்பாக்கள் இருவரும் அடித்து கொலை செய்த சம்பவம் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.