பேஸ்புக்கை திறந்தாலே இசையும், வைபுமாக ராகங்கள் வரிசைக் கட்டிக்கொண்டு இருக்கின்றன. ரைட்டப், அரசியல், மீம்ஸ் என வழக்கமான பாதையில் பொடி நடைபோட்டு சென்றுக்கொண்டிருந்த பேஸ்புக்கை படாரென இசைக்குள் இழுத்தவிட்ட சம்பவம் இசையமைப்பாளர்களின் பிறந்தநாள் தான். இசையமைப்பாளர்களின் பிறந்தநாள் என்றால் பக்கம் பக்கமாய் ரைட்டப் போடும் வழக்கத்தை இந்த வருடம் சற்று மாற்றினார்கள். ஏ ஆர் ரகுமான், ஹாரிஷ் என இசை ஜாம்பவான்களின் பிறந்தநாளை அவர்களின் இசை வழியாகவே கொண்டாடத் தொடங்கினார்கள் இசை ரசிகர்கள். 






அப்பப்பா.. இந்தப்பாட்டுல அப்படியே செத்துட்டேன் என நாம் உருகி வாய்வழியாக சொல்லும் கதையை வீடியோவுக்குள் கொண்டு வந்தனர். அதற்காக அவர்கள் கையில் எடுத்த ஆயுதம். திரைப்பட சீன்கள். அது எது மாதிரியான சீனாக இருந்தால் என்ன அதில் ஒரு பாதிப்பு இருந்தால் அதில் ஒரு எடிட்டை போட்டு பாட்டை உள்ளே சொறுகிவிடுவார்கள். இதுதான் ட்ரெண்ட்.  இதுதான் வைப்.. Vibe Posting என சோஷியல் மீடியாவில் பரபரவென சென்றுகொண்டிருக்கும் இந்த வைரலான் எண்டர்டெய்ன்மெண்ட் கேரண்டி தான். அதுவும் நீங்கள் இசை பிரியர் என்றால் ஒவ்வொரு வீடியோ எடிட்டும் செம ரகமாக இருக்கும். 






வடிவேலு காமெடிகள், முக்கிய படங்களில் எவர்கிரீன் சீன்கள், ஹாலிவுட் ரகம், கார்ட்டூன் என வைபுக்கு வீடியோவை கிடைத்த இடத்திலெல்லாம் வெட்டி எடுக்கிறார்கள் ஆன்லைன் எடிட்டர்கள். வேறு வழியில்லாமல் தற்போது சில காமெடி ஆக்ஸிடண்ட் சிசிடிவி காட்சிகளையே வைப் போஸ்டுக்கு பயன்படுத்த தொடங்கியுள்ளன. இது இப்படியே போனால் விபத்து வீடியோ என்றாலே வைப் போஸ்ட் போடலாமே என்று சிந்திப்பார்களோ என கண்ணில் ஜலம் வைக்கிறது ஒரு கும்பல்.






வடிவேலுவாக ரஹ்மான் வர, வானில் பறக்க வைக்கிறார் இளையராஜா, அந்தப்பக்கம் யுவன், ஹாரிஷ் இப்படி பற்றி எரிகிறது வைப் போஸ்ட். இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல, பாடகர்களை வைத்தும் தொடங்கிவிட்டது வைப் போஸ்ட். எஸ்பிபி, மனோ, யேசுதாஸ், சித்ரா, ஜானகி என பாடகர்களுமே வைப் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். கொஞ்ச நாளைக்கு இசை என்ற இன்ப வெள்ளத்தில்தான் நீச்சலடிக்க வேண்டுமென தீயாய் வேலை செய்கிறது இந்த வைப் கும்பல். எது எப்படியோ? இசைக்கு இசையும் ஆச்சு.. ஜாலிக்கு ஜாலியும் ஆச்சுமென என்சாய் செய்கின்றனர் இணையவாசிகள்.