உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மன அழுத்தத்தால் தனது மனைவி, மகன் மற்றும் மகளை கொலை செய்துள்ளார். கொலை தொடர்பாக தனது சகோதரருக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பிய அந்த மருத்துவரை இப்போது போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.


கான்பூரைச் சேர்ந்த மருத்துவர் சுஷில் குமார். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தடயவியல் மருத்துவத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் இருந்தனர். அனைவரும் கல்யான்பூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். 61 வயதான சுஷில் குமார் சமீப காலமாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று மாலை சுஷில் தனது சகோதர் (இரட்டையர்) சுனிலுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், ஒமிக்ரான் இனி நீ சவங்களை எண்ண முடியாது என்று கூறியிருந்தார். அதாவது ஒமிக்ரானால் சாவு நேராது, தானே கொன்றுவிட்டேன் என்ற பொருளில் அந்த தகவலை அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்த சனில் அதிர்ந்து போனார். உடனே சகோதரர் வசிக்கும் கல்யாண்பூர் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்துள்ளார்.


அங்கு அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிகளின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அவரது அண்ணன் மனைவி சந்திரபிரபா (48), அண்ணன் மகன் ஷிகார் சிங் (18), அண்ணன் மகள் குஷி சிங் ஆகியோர் தனித்தனி அறைகளில் இறந்து கிடந்தனர். இதனையடுத்து காவல் துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் பிரேதங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காவல் ஆணையர் அசிம் அருண், இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் , கொலையில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மருத்துவர் சுஷில் குமாரை தேடி வருவதாகவும் கூறினார். 


சுஷில் குமார் தனது மனைவி சந்திரபிரபாவை சுத்தியால் அடித்துக் கொன்றுள்ளார். மகன், மகளை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். கொலைக்கு முன்னதாக மூவருக்கு மயக்க மருந்து கலந்த தேநீரை சுஷில் குமார் கொடுத்துள்ளார். அவர்கள் மூவரும் மயங்கிய பின்னர் கொலை செய்துள்ளார். 


இது குறித்து சுஷில் குமார் எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்று போலீஸாரின் கைகளில் சிக்கியுள்ளது. அக்கடிதத்தில், நான் தீரா நோயினால் அவதிப்பட்டு வருகிறேன். எனக்கு மன அழுத்தம் இருக்கிறது. மேலும் கொரோனா பெருந்தொற்று யாரையும் விடாது. எனது அஜாக்கிரதையால் பணியிடத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலில் இருந்து நான் மீளவே முடியாது. நான் இல்லாவிட்டால் என் குடும்பத்தினர் சிரமப்படுவார்கள். அதனாலேயே அவர்களை நான் கொலை செய்துவிட்டேன். இவ்வாறு அதில் சுஷில் குமார் குறிப்பிட்டுள்ளார்.




அவரது கடிதத்ததைக் கைப்பற்றிய போலீஸார் அதனை தடையவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் சுஷில் குமாரை பிடிக்க பல்வேறு தனிப்படைகளையும் அமைத்துள்ளனர்.


மருத்துவர் ஒருவர் தனது குடும்பத்தினரையே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.