டெல்லியின் படேல் நகர் பகுதியில் தனது சகோதரியிடம் தவறாக நடந்த கொண்டதற்காக  இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குத்தி கொலை:


டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறுவன் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுவன் ஐ.டி.ஐ பூசா சாலையைச் சேர்ந்த மனோஜ் நேகி என்பவர் என அடையாளம் தெரிந்தது.


இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியில், பல்வேறு மக்கள் கடந்து செல்லும்போது, காயமடைந்த சிறுவனுக்கு உதவ யாரும் வரவில்லை என்பது தெரியவந்தது. சி.சி.டி.வி காட்சிகளில் அவர் உதவி பெற முயற்சிக்கும்போது அவரது உடலில் ஒரு கத்தி சிக்கியிருப்பது தெரிகிறது. அந்த பரபரப்பான தெருவின் தரையில் சிறுவன் படுத்திருப்பதை பலர் பார்த்தும், யாரும் அவரது உதவிக்கு வரவில்லை.


விசாரணை:


இச்சம்பவம் தொடர்பாக நடத்திய தொடர் விசாரணையில் சிறுவர்கள் இருவர் அந்த இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் சிறுவர்களின் சகோதரியை இளைஞர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இளைஞருக்கும், சிறுவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவனுடன் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவனும் சேர்ந்து, இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.


மேலும், வெளியாகியுள்ள சிசிடிவி வீடியோவில், சிறுவன் தனது உடலில் ஒரு கத்தியுடன் ஒரு கடையை நோக்கி நடந்து செல்வதைக் காணலாம். சிறுவன் உதவி கேட்டுக் கொண்டிருந்தான், ஆனால் திடீரென்று அவன் தரையில் விழுகிறான், மக்கள் அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.


உதவிக்கு யாரும் முன்வரவில்லை:


இதையடுத்து, சி.சி.டி.வி காட்சிகளில், சிறுவன் ஒரு வீட்டின் வாயிலுக்கு அருகில் படுத்திருப்பதைக் காணலாம். வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து பாதிக்கப்பட்டவரின் நிலையைப் பார்ப்பதைக் காணலாம். இருப்பினும், அவர் சிறுவனுக்கு உதவாமல் வீட்டிற்குள் சென்றார்.


இன்னும் பலர் சிறுவனைப் பார்த்து அவனைப் புறக்கணிப்பதைக் காணலாம். உள்ளூர் கடைக்காரர் கூட சிறுவனைப் பார்த்துவிட்டு, அவருக்கு உதவவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தெரிவித்திருப்பதாவது, டெல்லியில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்றதற்காக இரண்டு சிறுர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படேல் நகரில் அவரது வீட்டின் முன் இருவரும் கத்தியால் குத்தியபோது இந்த சம்பவம் நடந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கணினி வகுப்பிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார் என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவம் டெல்லி மாநகரில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: crime: முன்விரோதத்தில் வெறிச்செயல்... வாலிபரை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள்