வடகிழக்கு டெல்லியில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், திருப்புமுனையாக அவரது மனைவி 6 மாதங்களுக்கு முன்பு, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களே காரணம் எனக் கூறியுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களின் மீது கொலை வழக்கில் குற்றப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஹோலி பண்டிகையின் போது, காசியாபாத்தில் தன்னை 4 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறிய இறந்தவரின் மனைவி, அவர்கள் மீது புகார் அளித்ததாகவும், அவர்களின் மிரட்டலுக்குப் பிறகு புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். தன்னை வன்கொடுமை செய்தவர்கள், அவரது கணவரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டியதாகவும், அதற்காக அடியாள்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவில், இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்வு நடந்துள்ளதாகவும், மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு டெல்லியின் காவல்துறை துணை ஆணையர் சஞ்சீவ் சயின், `இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் விசாரித்ததில், இறந்தவரின் வீட்டிற்கு நள்ளிரவில் இருவர் வந்துள்ளனர். பெண்ணின் கணவர் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன், அவர்மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அவரது மனைவி சில மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், லோனி காவல் நிலையத்தில் புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். அவரது கணவரும், அவரும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களால் மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்கலாம்’ எனப் பேட்டி அளித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பாதிக்கப்பட்ட குடும்பம் லோனியில் இருந்து டெல்லிக்குக் குடியேறியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளது காவல்துறை. மேலும், இறந்தவர் போதை மருந்து விற்பனை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பது குறித்து கேள்வி எழுப்பிய காவல்துறையினரிடம், அதனை அவரது மனைவி ஒப்புக் கொண்டிருப்பதையும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், குட்டு, மெராஜ், வஷி, தம்ஜித் ஆகிய நால்வரும் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களுள் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். `கைது செய்யப்படாமல் இருந்த மற்ற மூவரும் எங்களைக் கொலை செய்வதாக மிரட்டியதோடு, புகாரைத் திரும்பப் பெறுமாறு கூறினர். நாங்கள் காவல்துறையினரிடம் முறையிட்டு, பயம் காரணமாக டெல்லிக்குக் குடியேறினோம்’ என்று டெல்லி காவல்துறையிடம் கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.
காசியாபாத் கிராமப்புற மண்டலக் காவல் கண்காணிப்பாளர் இராஜ் ராஜா இதுகுறித்துப் பேசிய போது, `பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மை. பாதிக்கப்பட்ட பெண் அப்போது ஒரு குற்றவாளி மீது மட்டுமே புகார் அளித்ததால் அவரைக் கைது செய்தோம். பிறகு, இன்னும் பலர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். அவரது வாக்குமூலம் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. இந்த இரு வழக்குகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து எங்களை டெல்லி காவல்துறையினர் தொடர்புகொள்ளவில்லை’ என்று கூறியுள்ளார்.