சொல்லாமல் சொன்ன அண்ணாமலை... எச்.ராஜா பேச்சுக்கு மறைமுக கண்டனம்!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்.

Continues below advertisement

பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா நேற்று  சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்வில், அவர் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், நிதானம் தவறி , Presstitute - ஊடக வேசிகள் எனத் தரம் தாழ்ந்து  பேசினார் அவரின் இந்தப் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஹெச்.ராஜாவின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்கள் ஹெச்.ராஜாவின் இந்த விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியிருந்தது.

Continues below advertisement

இந்த நிலையில், ஹெச்.ராஜாவின் பேச்சு தொடர்பாக கண்டனம் தெரிவிக்காமல், பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. 
நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும்  உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது. நன்றி… வணக்கம்" எனப் பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் சமீபகாலங்களில் அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு எளிய இலக்காகப்  பத்திரிகையாளர்கள் ஆளாகி வரும் கொடுமையான போக்கு அதிகரித்து வருகிறது. இது மிக ஆபத்தானது மட்டுமல்ல, கருத்துரிமையில் நம்பிக்கை உள்ள அத்தனை ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். 

செய்தியாளர்களைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில், வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பண்பாடு இன்றிப் பயன்படுத்தி வருகிறார் பாஜக பிரமுகர் எச்.ராஜா. நேற்றைய தினம்  (27-09-2021 ) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்வில் எச்.ராஜா, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம். ஆனால், நிதானம் தவறி , Presstitute - ஊடக வேசிகள் எனத் தரம் தாழ்ந்து ஏசியுள்ளார். எச்.ராஜாவின் இந்த அநாகரிகப் பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கின்றது. ஹெச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும், செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு , நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஹெச்.ராஜாவின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்கள் ஹெச்.ராஜாவின் இந்த விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுவெளியில் இத்தகைய ஆபாச விமர்சனங்களைச் செய்துவரும் ஹெச்.ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.பத்திரிகையாளார்கள், ஊடகங்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. ஆனால், அவை நேர்மையானதாக,  தரமானதாக இருக்கட்டும். மாறாக, அவதூறுகளால், மிரட்டல்கள், வாய்ப்பூட்டு போட நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.தொடர்ந்து ஊடகத்துறையினர் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஊடக நிர்வாகிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம். 

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Continues below advertisement
Sponsored Links by Taboola