டெல்லியில் பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு இரண்டு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பெண் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் தெற்கு டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்ஐஆரில், ‘மார்ச் 24ஆம் தேதி இரவு 11.28 மணிக்கு ஒரு போலீசாருக்கு அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் மயங்கிக் கிடப்பதாகவும், அவர் வாயில் இருந்து ரத்தம் வருவதாகவும் போன் செய்தவர் தெரிவித்தார்’ எனக் கூறப்பட்டுள்ளது.
”குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க நாங்கள் ஐந்து குழுக்களை அமைத்துள்ளோம். பாதிக்கப்பட்டவர் சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். வாகனத்தை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். திருமணமான அந்தப் பெண்சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது, வாகனத்தில் ஏதோ பிரச்னை இருப்பதாக டிரைவர் கூறினார். ஆட்டோடிரைவர் பின்னர் தனது கூட்டாளியை அழைத்தார். இருவரும் அவரை ஒரு ஒதுக்குப்புற இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்று பெண் போலீஸ் உயரதிகாரி கூறினார்.
குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்